கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய ஏற்பாடு
ராஜபாளையம், வத்திராயிருப்பு விவசாயிகளிடம் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விற்பனை குழு செயலாளர் வேலுச்சாமி தெரிவித்துள்ளார்.
ராஜபாளையம், வத்திராயிருப்பு விவசாயிகளிடம் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விற்பனை குழு செயலாளர் வேலுச்சாமி தெரிவித்துள்ளார்.
உள்கட்டமைப்பு வசதி
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
விருதுநகர் விற்பனை குழுவின் கீழ் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனை கூட அலுவலகம் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.
இதனால் கொள்முதல் பணிகளுக்கு தேவையான பரிவர்த்தனை கூடம், ஏல கொட்டகை, தர பகுப்பாய்வு கூடம், சேமிப்பு கிடங்கு போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை கொண்ட ராஜபாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விலை ஆதாய திட்டத்தின் கீழ் நியாயமான சராசரி தரங்களுடன் விவசாயிகளிடமிருந்து கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யும் திட்டத்தினை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் 300 மெட்ரிக் டன் என்ற இலக்குடன் கிலோ ரூ.108.60 என்ற குறைந்தபட்ச ஆதரவு விலையில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை கொள்முதல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொள்முதல்
மேலும் வத்திராயிருப்பு மகாராஜபுரம் கிராமத்தில் 165 எக்டேர் அரசு புறம்போக்கு நிலத்தினை வழங்கிட வேண்டி மாவட்ட நிர்வாகத்திடம் கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட இடத்தினை விற்பனைக்குழுவிற்கு முன் நுழைவு அனுமதி வழங்கும் பட்சத்தில் வத்திராயிருப்பு ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வத்திராயிருப்பு பகுதியில் உள்ள விவசாயிகளின் நலன் கருதி கடந்த ஆண்டு போல தற்போதும் கான்சாபுரத்தில் உள்ள கிட்டங்கியில் கொப்பரை தேங்காய் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை கொள்முதல் செய்யப்பட உள்ளது.
பயன்பெறலாம்
எனவே ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு விவசாயிகள் தங்கள் உற்பத்தி செய்த கொப்பரை தேங்காய்களை அரசு நிர்ணயித்துள்ள விதிமுறைப்படி விற்பனை செய்யலாம்.
எனவே விவசாயிகள் தங்கள் கொப்பரை தேங்காய்களை தேசிய வேளாண்சந்தை திட்டத்தில் விற்பனை செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.