ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி ஊர்வலம்... வழிநெடுகிலும் மலர் தூவி அஞ்சலி செலுத்தும் பொதுமக்கள்
மழைக்கு இடையே பொத்தூர் நோக்கி இறுதி ஊர்வலம் சென்றுகொண்டிருக்கிறது.
சென்னை,
கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி மாநில அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி வக்கீல் பொற்கொடி தரப்பில் சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டது. அதன்படி, இந்த மனுவை தனி நீதிபதி ஒருவர் விசாரிக்க பொறுப்பு தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
பல்வேறு கட்ட விசாரணையின் முடிவில், ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூர் மாவட்ட செங்குன்றம் அருகே பொத்தூரில் உள்ள இடத்தில் அடக்கம் செய்து கொள்ளலாம் என்றும், பெரம்பூர் கட்சி இடத்தில், அரசின் அனுமதி பெற்று நினைவிடம் அமைத்துக் கொள்ளலாம் என நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், கட்சி அலுவலகம் உள்ள இடத்தில் அடக்கம் செய்யக் கூடாது என்பதுதான் பிரச்சினை, நினைவு மண்டபம் கட்ட பிரச்சினை இல்லை. கண்ணியமான முறையில் ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும். காவல்துறை போதுமான பாதுகாப்பை வழங்க வேண்டும்" என நீதிபதி பவானி சுப்புராயன் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங்கின் உடலை அடக்கம் செய்வதற்காக திருவள்ளூர் மாவட்ட செங்குன்றம் அருகே பொத்தூரில் உள்ள ரோஜா நகருக்கு எடுத்துச்செல்லப்பட்டு வருகிறது. இந்த இறுதி ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்கள், கலந்துகொண்டு வழி நெடுகிலும் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மழைக்கு இடையே பொத்தூர் நோக்கி இறுதி ஊர்வலம் சென்றுகொண்டிருக்கிறது. இறுதி ஊர்வலம் தொடங்கி 3 மணி நேரமாகியும் இதுவரை சுமார் 5 கி.மீ தூரத்தை மட்டுமே கடந்துள்ளது. இன்னும் 16 கி.மீ தூரம் இறுதி ஊர்வலம் நடைபெற உள்ளது. போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் இறுதி ஊர்வலம் நடைபெற்று வருகிறது. போக்குவரத்தை சரிசெய்யும் பணியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.