அரியலூர்- திருச்சி சாலையில் குவிந்துள்ள குப்பைகளால் சுகாதார சீர்கேடு
அரியலூர்- திருச்சி சாலையில் குவிந்துள்ள குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து உள்ளனர்.
மலைபோல் குவிந்த குப்பைகள்
அரியலூரில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றன. மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு மற்றும் பெரிய கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள் இயங்கி வருகின்றன. இங்கு நாள்தோறும் 3 முதல் 4 டன் வரையிலான குப்பைகள் சேகரமாகின்றன. இந்த குப்பைகள் அனைத்தும் அரியலூரிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் மலைபோல் குவிக்கப்பட்டுள்ளன.
இங்கு மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் அனைத்தும் ஒரே இடத்தில் கொட்டி வைக்கப்படுவதால், பன்றி, ஆடு, மாடு, குதிரை, கழுதை, நாய் உள்ளிட்ட பல்வேறு கால்நடைகள் உணவை தேடி வருகின்றன. இதனால் குவியலாக கொட்டி வைக்கப்படும் குப்பைகள் கால்நடைகளால் சாலைகளுக்கு கொண்டு வரப்படுகிறது. மேலும், காற்று வீசும் நேரத்தில் சுமார் 500 மீட்டர் சுற்றளவுக்கு இந்த குப்பைகள் குறிப்பாக பாலித்தீன் பைகள் அடித்து செல்லப்படுகிறது.
கடும் துர்நாற்றம்
சில நேரங்களில் குப்பைகள் தீப்பற்றி எரியும் போது அவ்வழியே சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர். மழைக்காலங்களில் குப்பைகளை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. அரியலூரை அடுத்த கீழப்பழுவூரில் மக்கும் குப்பை, மக்காத குப்பைக்கான கிடங்குகள் இருந்தும் அங்கு குப்பைகள் முறையாக எடுத்து செல்லப்படுவது இல்லை.
தற்போது அவ்வப்போது மழை பெய்து வருவதால் அரியலூர்- திருச்சி சாலையில் கொட்டப்பட்டு உள்ள குப்பைகளில் மழைநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதுகுறித்து அரியலூரை சேர்ந்த சமூக ஆர்வலர் இளவரசன் கூறியதாவது:-
குப்பைக்கிடங்கு
அரியலூர்- திருச்சி சாலையில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கீழப்பழுவூரில் மறுசுழற்சி செய்யும் வகையில் மக்கும் குப்பை, மக்காத குப்பைக்காக கிடங்கு ஏற்படுத்தப்பட்டாலும் அங்கு குப்பைகள் கொண்டு செல்லப்படுவது இல்லை. நகரின் அருகிலேயே நகராட்சி ஊழியர்கள் குப்பைகளை கொட்டி செல்கிறார்கள். இதனால் திருச்சி மற்றும் தஞ்சையிலிருந்து அரியலூர் நகருக்குள் வரும் வாகன ஓட்டிகள், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
குறிப்பிட்ட இந்த பகுதியை கடந்து செல்வது வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. மேலும், நகரில் வாகனங்களில் விபத்துக்குள்ளாகி உயிரிழக்கும் நாய், பன்றி உள்ளிட்டவைகளும் இங்கு வீசப்படுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
சுண்ணாம்புக்கல் சுரங்கம்
எனவே, மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகளை காலாவதியான சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் கொட்டி மூடலாம். இதனால் சுரங்கம் மூடப்படுவதுடன், குப்பைகளும் அப்புறப்படுத்தப்படும். இனிவரும் காலங்களில் இங்கு குப்பைகளை கொட்டாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் கேட்டபோது, அரியலூர்- திருச்சி சாலையில் தேங்கி கிடக்கும் குப்பைகளை பயோ மைனிங் செய்ய அனுமதி கிடைத்துள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றார்.