அழகிய இயற்கை சூழலில் 'அரிக்கொம்பன்' யானை -வனத்துறை தகவல்
உடல்நிலை, நடமாட்டம் குறித்து கண்காணிப்பு அழகிய இயற்கை சூழலில் ‘அரிக்கொம்பன்’ யானை வனத்துறை தகவல்.
சென்னை,
தேனி மாவட்டம் கம்பம் பகுதி மக்களை அச்சுறுத்தி வந்த அரிக்கொம்பன் யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட நிலையில் பிரத்யேக லாரி மூலம் நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் உள்ள அப்பர் கோதையாறு வனப்பகுதியில் விடப்பட்டது.
அரிக்கொம்பன் யானையின் நடமாட்டத்தை வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அதாவது அரிக்கொம்பன் யானையின் காதில் பொருத்தப்பட்டு உள்ள 'ரேடியோகாலர்' எனப்படும் 'எலக்ட்ரானிக்' கருவியை பயன்படுத்தி ஜி.பி.எஸ். மூலம் வனத்துறை அதிகாரிகள் யானையின் உடல்நிலை, நடமாட்டம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு தனது டுவிட்டர் பதிவில், 'அரிக்கொம்பன் யானை அழகிய இயற்கை சூழலுக்கு இடம் பெயர்ந்த பிறகு நன்றாக இரை எடுத்துக்கொள்கிறது. அரிக்கொம்பன் யானையின் உடல்நிலை மற்றும் நடமாட்டம் குறித்து தமிழக வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்' என கூறி உள்ளார்.
மேலும், ஜி.பி.எஸ். மூலம் பதிவான யானையின் நடமாட்டம் குறித்த படத்தையும் அவர் அந்த டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.