நீண்டதூர ரெயில்களில் போதுமான வசதி செய்து தரப்படுகிறதா?: பயணிகள் கருத்து
நீண்டதூர ரெயில்களில் போதுமான வசதி செய்து தரப்படுகிறதா? என்பது குறித்து பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கரூர் ரெயில் நிலையம் 1866-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ரெயில் நிலையத்தில் 5 நடைமேடைகள் உள்ளன. கரூர் ரெயில் நிலையத்தில் ஆண்கள், பெண்கள் பயணிகளுக்கு என தனித்தனியாக ஓய்வறைகள் உள்ளன.
100 அடி உயரத்தில் கொடி கம்பம்
ரெயில்கள் வருவதை குறிக்கும் டிஜிட்டல் போர்டு, ஏ.டி.எம். வசதி, மருத்துவ உதவி சிகிச்சை மையம், கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறை உள்ளன. 5 நடைமேடைகளிலும் கண்காணிப்பு கேமரா வசதி உள்ளது. மேலும் 2 ஏ.டி.வி.எம். எனப்படும் மெஷின் மூலம் க்யூஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்து டிக்கெட் பெறும் வசதி இங்கு உள்ளது.
கார், இருசக்கர வாகனங்கள் நிறுத்தவதற்கு விசாலமான பார்க்கிங் வசதி. கழிப்பறை வசதி அனைத்து நடைமேடைகளும் உள்ளது. 5 கேண்டீன் வசதியும் இருக்கிறது. மேலும் கரூர் மாவட்டத்தில் பிரபலமாக உள்ள பொருட்களை விற்பனை செய்யும் ஒரு ரெயில் நிலையம் ஒரு பொருள் திட்டத்தின்கீழ் ஒரு விற்பனை அங்காடியும் உள்ளது. கரூர் ரெயில் நிலைய வளாகத்தில் 100 அடி உயரத்தில் கொடி கம்பம் நடப்பட்டு தேசியக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.
தினமும் 40 ரெயில்கள்
தற்போது அம்ரித் பாரத் திட்டத்தில் கரூர் ரெயில் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால் கரூர் ரெயில் நிலையம் மறுகட்டமைப்பு செய்யப்பட்டு, லிப்ட், நகரும் படிக்கட்டு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு நவீனமயமாக்கப்படஉள்ளது.
இப்படி பல்வேறு வசதிகள் உடைய இந்த கரூர் ரெயில் நிலையம் வழியாக தினமும் டெல்லி, புதுச்சேரி, மங்களூரு, ேகாவா உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சென்று வருகிறது. இதேபோல திருச்சி, சேலம், திண்டுக்கல், நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் ரெயில்கள் வந்து செல்கின்றன. அதேபோல் தினமும் இந்த ரெயில் நிலையத்திற்கு பாசஞ்சர் முதல் எக்ஸ்பிரஸ் வரை தினமும் 40 முதல் 50 ரெயில்கள் வந்து செல்கின்றன. இதனால் இங்கிருந்து தினமும் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பயணிகள் பயணிக்கின்றனர்.
இந்த பயணிகளுக்கு ரெயில்களிலும், பிளாட்பாரங்களிலும் போதிய வசதிகளை ரெயில்வே நிர்வாகம் செய்து தந்து உள்ளதா? அவை போதுமானதாக இருக்கிறதா? என்பது குறித்து பயணிகள் பல்வேறு கருத்துகளை கூறுகின்றனர். அதன் விவரம் பின் வருமாறு:-
உயரத்தில் படுக்கை
இதுகுறித்து தமிழக மாற்றுத்திறனாளிகள் உரிமை மீட்பு சங்க மாநில தலைவர் எம்.அப்துல் மாலிக் கூறும்போது, 'என்னதான் இருந்தாலும் ரெயில் ஓடும்போது நம்மை கடந்து செல்லும் மரங்கள், மின் கம்பங்கள், நதிகள், பாலங்கள் எல்லாவற்றையும்விட சில சமயங்களில் ரெயில் பயணிகளுக்கு 'டாட்டா' சொல்லும் சிறு குழந்தைகளின் செயல் ஒரு தனி சந்தோஷத்தை அளிக்கிறது. இருந்தாலும் ரெயில் பயணத்தின் போது ஒரு சில நேரங்களில் நரக வேதனையாகவும் மாறிவிடுகிறது. குறிப்பாக முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான டிக்கெட் கட்டண சலுகைகளை பறித்த ரெயில்வே நிர்வாகம், பயணிகளுக்கான வசதிகளை முறையாக செய்துதர வேண்டியது அவர்களுடைய கடமையாகும். குறிப்பாக படுக்கைகளாவது முறையாக ஒதுக்கலாம். அதுவும் செய்வதில்லை. முதியவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் 'அப்பர் பெர்த்' என்று அழைக்கப்படும் உயரத்தில் உள்ள படுக்கைகளை ஒதுக்குகின்றனர். மனித நேயம் குறைந்து வரும் இந்த காலகட்டத்தில் படுக்கைகளை மாற்றித்தர விரும்பாத சில பயணிகளால் முழுக் கட்டணத்தையும் செலுத்திய முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உயரத்தில் உள்ள படுக்கைளில் ஏற முடியாமல் இரவு முழுவதும் தரையில் அமர்ந்து பயணம் செய்யும் அவல நிலை தொடர்கிறது. இதனை மாற்றி முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் தரமான சேவையை அளிக்க ரெயில்வே நிர்வாகம் முன்வரவேண்டும். அதேபோல் ஏழ்மை நிலையில் இருக்கும் மாற்றுத்திறனாளிகள் நலன் கருதி டிக்கெட் கட்டண சலுகையையும் வழங்க ரெயில்வே வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்' என்றார்.
கழிவறை செல்வதற்கு சிரமம்
கரூரை சேர்ந்த ராமச்சந்திரன்:-
கடந்த 21 ஆண்டுகளாக ரெயிலில் பயணம் செய்து வருகிறேன். கடந்த காலங்களில் இருந்ததைவிட தற்போது நடைமேடை, ரெயில்களில் வசதிகள் நன்றாக உள்ளது. நடைமேடைகள், ரெயில்களில் அடிக்கடி சுத்தம் செய்து தூய்மையாக வைத்திருக்கிறார்கள். ஒருசில ரெயில்களில் சுத்தம் குறைவாக உள்ளது. தற்போது முன்பதிவு செய்த பெட்டிகளில் முன்பதிவு செய்யாத பலர் ஏறிவிடுகிறார்கள். இதனால் கழிவறை செல்வதற்கு கூட சற்று சிரமமாக உள்ளது. முன்பதிவு பெட்டிகளில் பதிவு செய்தவர்களை தவிர மற்றவர்கள் ஏறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து புகார் செய்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. ரெயில்களில் முன்பே விட தற்போது கழிவறை வசதி நன்றாக உள்ளது. இருந்தபோதிலும் ரெயில்களில் உள்ள கழிவறையை இன்னும் அடிக்கடி சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும். தட்கல்லில் டிக்கெட் புக் செய்பவர்களுக்கு லோயர் பர்த் கொடுத்துவிடுகிறார்கள். ஓரு நாட்களுக்கு முன்பு டிக்கெட் எடுப்பவர்களுக்கு லோயர் பர்த் கிடைக்கிறது. 3 மாதங்களுக்கு முன்பு டிக்கெட் புக் செய்பவர்களுக்கு அப்பர் பர்த் தான் கிடைக்கிறது. இதனால் வயதானவர்கள், பல நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்தவர்கள் சிரமப்படுகிறார்கள். இதனை மாற்றியமைத்தால் நன்றாக இருக்கும்.
சலுகை கட்டணம் வேண்டும்
கரூர் சிவாஜி நகரை சேர்ந்த செந்தில்குமார்:-
நாங்கள் குடும்பத்துடன் மற்றும் நண்பர்களுடன் அடிக்கடி சென்னை, பெங்களூரு போன்ற வெளியூர்களுக்கு செல்வது வழக்கம். நாங்கள் காஷ்மீர் வரை சுற்றுலா பயணம் சென்று உள்ளோம். ஆனால் ரெயில்களில் செல்லும் போது சுத்தமான குடிநீர் கிடைப்பது இல்லை. விலை கொடுத்து தான் தண்ணீர் வாங்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு கம்பார்ட்மெண்டிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கினால் நன்றாக இருக்கும்.
தமிழகத்தை பொறுத்தவரை ரெயில் பெட்டிகள் சுத்தமாக இருக்கும். வட இந்தியாவில் பயணம் செய்த போது சுத்தம் குறைவாக தான் இருக்கும். போதுமான கழிவறை வசதி இல்லை. மூத்த குடிமகன்களுக்கு சலுகை கட்டணத்தில் டிக்கெட் கொடுக்க வேண்டும், லோயர் பெர்த் வழங்க வேண்டும். மேலும் இரவு நேரங்களில் போலீஸ் பாதுகாப்பை ரெயில் பெட்டிகளில் அதிகப்படுத்த வேண்டும்
கீழ் படுக்கை வசதி நன்றாக இருக்கும்
புகழூர் பகுதியை சேர்ந்த அழகர்:-
மாதத்தில் 4 முறையாவது நீண்டதூர ரெயில் பயணத்தை மேற்கொள்கிறேன். புகழூர் ரெயில் நிலையத்தில் இருந்து மங்களூர்-சென்னை செல்லும் விரைவு ரெயிலில் சொந்த வேலையாகவும், வியாபார நோக்கிலும் சென்று வருகிறேன். நான் செல்லும் ரெயில் பெட்டியில் தூங்கும் வசதி கொண்ட படுக்கை இருப்பதால் எனக்கு மிகவும் சவுகரியமாக உள்ளது. ரெயில் பெட்டியில் உள்ள கழிவறை மிக சுத்தமாக உள்ளது. திருட்டு போன்ற சம்பவங்கள் நடைபெறமல், இருக்க டிக்கட் பரிசோதகர் பாதுகாப்பாக இருக்கிறார். ரெயில் ஏறியவுடன் என்னுடைய இருக்கைக்கு கூட்டிசென்று அமர உதவி செய்வார். எனக்கு எப்போது கீழ்படுக்கை வசதி கிடைப்பதற்கு முயற்சி செய்வேன், ஆனால் மேல் படுக்கை வசதிதான் கிடைக்கும். அடிக்கடி கீழே இறங்கி வருவது தான் மிகவும் சிரமமாக இருக்கும். மேல் அடுக்கு படுக்கையையொல்லாம், நீக்கி விட்டு கீழ் படுக்கை வசதி மட்டும் வைத்திருந்தால் ரெயிலில் பயணம் செய்வதற்கு மிகவும் நன்றாக இருக்கும்.
உணவகம் வேண்டும்
தளவாப்பாளையத்தை சேர்ந்த ஆனந்த்:-
நான் வாரத்தில் ஒரு முறையாவது ரெயில் பயணம் மேற்கொள்கிறேன். ஒடிசா, ஜம்மு காஷ்மீர் போன்ற இடங்களுக்கு ரெயில்களில் பயணம் செய்து வருகிறேன். நான் பெரும்பாஷம் அமரும் இருக்கை வசதியிலேயே முன்பதிவு செய்து கொள்வேன், ஏனென்றால் படுக்கை வசதிக்கு முன்பதிவு செய்யும்போது சில நேரங்களில் கிடைப்பதில்லை. மேலும், தொலை தூரம் செல்லும் ரெயில்கள் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு சென்ற பிறகு, மற்றொரு ரெயில் ஏறி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. அதனை குறைக்க வேண்டும். சில எக்ஸ்பிரஸ் ரெயில்களில் உணவகம் இருப்பதுபோல், அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் உணவகம் இருந்தால் வயதானவர்கள், குழந்தைகளுக்கு உதவிக்கரமாக இருக்கும். இதுகுறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கழிவறை தூய்மை இல்லை
பெங்களூருவில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்யும் குளித்தலை பகுதியைச் சேர்ந்த அஜித்குமார்:-
தொலைதூர ெரயில்களில் ஏ.சி. வகுப்புகள் தவிர மற்ற வகுப்புகளில் உள்ள கழிவறைகள் தூய்மையாக இருப்பது இல்லை. நீண்ட தூரம் பயணம் செய்யும்போது அந்த ெரயில்களில் வழங்கப்படும் உணவுகள் வீட்டில் சமைக்கும் உணவை போல இருக்காது. அந்த உணவுகள் சில சமயங்களில் சுவையற்றும் சுமாராகவே இருக்கும். வடமாநில பகுதிகளுக்குச் செல்லும் பொழுது முன்பதிவு செய்த பெட்டிகளில் நமது இருக்கையில் வட மாநில தொழிலாளர்கள் சர்வ சாதாரணமாக அமர்ந்து வருவார்கள். இதனால் நாம் பயணம் செய்யும்போது அசவுகரிமாக இருக்கும். நாம் அவர்களை இருக்கை விட்டு எழுந்து விடுமாறு கூறும் பொழுது ஒரு சிலர் உடனடியாக இருந்து கொள்வார்கள். பலர் தங்களது ஊர் வந்தவுடன் இறங்கிக்கொள்வார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.