வேலைவாய்ப்பு முகாம்கள் பலன் தருகிறதா?


மத்திய-மாநில அரசுகள் நடத்தும் வேலைவாய்ப்பு முகாம்கள் பலன் தருகிறதா என இளைஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விருதுநகர்

2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 9 கோடி பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசை சர்வதேச நிதி அமைப்பு அறிவுறுத்தி இருக்கிறது.

பெருகிவரும் மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டு இந்த யோசனையை அந்த அமைப்பு தெரிவித்து இருக்கிறது.

அதன் அடிப்படையில் மத்திய அரசு துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூன் மாதம் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

பிரதமர் மோடி அதிரடி

'மத்திய அரசு பணிகளில் 18 மாதங்களில் 10 லட்சம் பேர் நியமனம் செய்யப்படுவார்கள்' என்று அப்போது பிரதமர் மோடி அதிரடியாக ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி ரெயில்வே துறையில் 2 லட்சத்து 93 ஆயிரம், பாதுகாப்புத்துறையில் 2 லட்சத்து 63 ஆயிரம், உள்துறையில் 1 லட்சத்து 43 ஆயிரம், தபால்துறையில் 90 ஆயிரம், வருவாய்த்துறையில் 80 ஆயிரம், கணக்கு தணிக்கைத் துறையில் 26 ஆயிரம், சுரங்கத்துறையில் 7 ஆயிரம், அணுசக்தி துறையில் 9 ஆயிரத்து 400, நீர்வளத்துறையில் 3 ஆயிரத்து 800 என மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 9 லட்சத்து 79 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், எஸ்.எஸ்.சி., ரெயில்வே தேர்வு வாரியம் போன்றவைகள் ஈடுபட்டு வருகின்றன.

கடந்த மாதம் 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். அதன் தொடர்ச்சியாக கடந்த 22-ந் தேதி அன்று 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன வழங்கும் முகாமையும் அவர் தொடங்கிவைத்தார்.

மு.க.ஸ்டாலினின் பெருமிதம்

தமிழ்நாட்டை பொறுத்த அளவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசும் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பில் அதிக அக்கறை காட்டி வருகிறது.

பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வுகள் நடத்தி நிரப்பப்பட்டு வருகின்றன.

தமிழக போலீஸ்துறையில் 3 ஆயிரத்து 552 போலீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கையில் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் ஈடுபட்டுள்ளது.

படித்த இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கித்தரும் பணியை தமிழக அரசின் தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டுத்துறை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி கடந்த ஆண்டு மட்டும் 419 முகாம்கள் நடத்தப்பட்டு 68 ஆயிரத்து 14 பேர் வேலை வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறார்கள்.

சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரியில் கடந்த மாதம் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசும்போது, 'தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 1 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது' என்று பெருமிதத்துடன் கூறினார். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் விரைவில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த வேண்டும் என்று தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சரை கேட்டுக்கொண்டார்.

இதுபோன்ற மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள் மூலம் வேலை இல்லாத் திண்டாட்டம் குறைந்து இருக்கிறதா? வேலை வாய்ப்பு முகாம்கள் பலன் தருகிறதா? என்பவை பற்றி பட்டதாரிகளும், வேலைதேடும் இளைஞர்களும் வெளிப்படுத்திய கருத்துகளை பார்ப்போம்.

உரிய வழிகாட்டல்

விருதுநகரை சேர்ந்த முத்துமணி:- மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் 70 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டதாகவும் மாநில அரசு சார்பில் தொடர்ந்து பணிநியமனங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையிலும் என் போன்ற படித்த இளைஞர்கள் வேலை தேடி வரும் நிலையில் எங்களுக்கும் இம்மாதிரியான பணி நியமனம் எப்போது கிடைக்கும் என்ற ஏக்கத்துடன் உள்ளோம். போட்டித்தேர்வுக்கு பயிற்சி பெற தனியார் நிறுவனங்களில் சேர்வதற்கான வசதி இல்லை.

அரசு சார்பில் போட்டி தேர்வு பயிற்சி மையமும் செயல்படவில்லை. மாவட்ட அளவில் பணி நியமன அறிவிப்புகள் வந்தாலும் நியமனம் பெறுவதற்கான வழிமுறைகளும் தெரியவில்லை. அன்றாடம் நாளிதழ்களை வினியோகம் செய்தும், கிடைக்கும் வேலைகளை செய்தும் வாழ்வாதாரம் பெறும்நிலை உள்ளது. படிக்க வைத்த பெற்றோருக்கு தொடர்ந்து பாரமாக இல்லாத நிலையில் அரசு வேலை கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. யாராவது உரிய வழிகாட்டல் வழங்கினால் ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளேன்.

கண்துடைப்பு செயல்

சிவகாசி நியாஸ் அகமது:- வேலை வாய்ப்பு முகாம் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் வரவேற்பு இல்லை. இருப்பினும் தொடர்ந்து இதுபோன்ற கண்துடைப்பு செயல்களை அரசு தொடர்ந்து செய்து வருகிறது. இந்தியா முழுவதும் பல லட்சம் பேர் வேலை இன்றி தவித்து வரும் நிலையில் இதுபோன்ற வேலை வாய்ப்பு முகாம்கள் எந்த அளவுக்கு உதவியாக இருக்கும் என்று தெரியவில்லை. தேர்தல் நடக்கும் நேரத்தில் மட்டும் இதுேபான்ற முகாம்கள் நடத்தாமல் பணியிடத்திற்கு தகுந்த படி வேலைவாய்ப்பு முகாமினை நடத்த வேண்டும். புதிய தொழில்கள் தொடங்க தேவையான உதவிகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். அரசு நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வதை நிறுத்தி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும்.

பயிற்சி மையம்

விருதுநகர் கோகுல்:- நான் இளநிலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். முதுநிலை பட்டப்படிப்பை தொடர வசதி இல்லாத நிலையில் அரசு பணிகளுக்காக பல்வேறு போட்டி தேர்வுகள் எழுதினாலும் அதற்கான உரியபயிற்சி பெற விருதுநகரில் போட்டி தேர்வு பயிற்சி மையமும் இல்லை. வேலைவாய்ப்பு அலுவலக பதிவு என்பது ஒரு சம்பிரதாய நடைமுறையாக உள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் வேலைகளை பெறவும் பரிந்துரை தேவை என கூறுகிறார்கள். மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்லாயிரக்கணக்கானோருக்கு பணி நியமனங்கள் வழங்கப்படுவதாக கூறப்பட்டாலும் என் போன்றவர்கள் வேலை தேடி தவிக்கும் நிலையில் தான் உள்ளோம். எனவே அரசு மாவட்ட தலைநகரில் பயிற்சி மையங்கள் அமைத்து என்னை போன்ற ஏழை இளைஞர்களும் உரிய பயிற்சி பெற்று அரசு பணியிடம் பெற வாய்ப்பளிக்க வேண்டும்.

ஏமாற்றம்

தாயில்பட்டி கார்த்திகா தேவி:- மத்திய, மாநில, அரசு நடத்தும் வேலை வாய்ப்பு முகாம் கண்துடைப்பாக மட்டுமே நடைபெறுகிறது. படிப்பிற்கான வேலை வாய்ப்பு போன்று நடைபெறுவதில்லை. பெயரளவில் நடைபெறும் முகாமில் பலமுறை கலந்து கொண்டோம். ஆனால் எவ்வித பலனும் இல்லை. இதனால் மிகவும் ஏமாற்றமாகவே இருந்து வருகிறது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ரெயில் நிலையங்களிலும் வடமாநிலத்தவரே பணியாற்றுகின்றனர். அப்படி இருக்கும்போது அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு எப்படி வேலை கிடைக்கும்.

பெண்களுக்கு தனி முகாம்

ஸ்ரீவில்லிபுத்தூர் தனலட்சுமி:- மத்திய, மாநில அரசுகள் நடத்தும் வேலை வாய்ப்பு முகாமில் ஆர்வமாக கலந்து கொள்கின்றோம். கலந்து கொள்பவர்களில் 20 சதவீதம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கின்றது. மத்திய, மாநில அரசுகள் நடத்தும் இந்த திட்டம் வரவேற்கத்தக்கது. இந்த திட்டத்தை மாவட்ட ஒரே இடத்தில் நடத்துவதை விட மறுமுறை நடத்தும் பொழுது மற்ற பகுதிகளிலும் நடத்த வேண்டும். மேலும் பெண்களுக்கென்று தனிப்பட்ட முறையில் வேலை வாய்ப்பு முகாம் நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஐ.டி. துறையிலும்...

மத்திய-மாநில அரசு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கங்கள் முனைப்பு காட்டி வருவது படித்த இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டால் அரசு துறைகளில் சுணக்கம் குறைந்து பணிகள் வேகம் எடுக்கும் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் பிறந்துள்ளது.

கொரோனாவால் ஆட்டம் கண்ட தனியார் துறையும் தற்போது ஆட்கள் தேர்வில் கவனம் செலுத்தி வருகிறது. ஐ.டி. துறையில் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று 'இன்போசிஸ்' நிறுவனத்தின் இணை நிறுவனர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன் சமீபத்தில் அறிவித்திருப்பது என்ஜினீயரிங் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.



Next Story