வேலைவாய்ப்பு முகாம்கள் பலன் தருகிறதா?


வேலைவாய்ப்பு முகாம்கள் பலன் தருகிறதா?
x
தினத்தந்தி 28 Nov 2022 12:30 AM IST (Updated: 28 Nov 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

மத்திய, மாநில அரசுகளின் இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் வேலை இல்லாத் திண்டாட்டம் குறைந்து இருக்கிறதா? வேலை வாய்ப்பு முகாம்கள் பலன் தருகிறதா? என்பது குறித்து பட்டதாரிகள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

திண்டுக்கல்

2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 9 கோடி பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசை சர்வதேச நிதி அமைப்பு அறிவுறுத்தி இருக்கிறது.

பெருகிவரும் மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டு இந்த யோசனையை அந்த அமைப்பு தெரிவித்து இருக்கிறது.

அதன் அடிப்படையில் மத்திய அரசு துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூன் மாதம் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

பிரதமர் மோடி அதிரடி

'மத்திய அரசு பணிகளில் 18 மாதங்களில் 10 லட்சம் பேர் நியமனம் செய்யப்படுவார்கள்' என்று அப்போது பிரதமர் மோடி அதிரடியாக ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி ரெயில்வே துறையில் 2 லட்சத்து 93 ஆயிரம், பாதுகாப்புத்துறையில் 2 லட்சத்து 63 ஆயிரம், உள்துறையில் 1 லட்சத்து 43 ஆயிரம், தபால்துறையில் 90 ஆயிரம், வருவாய்த்துறையில் 80 ஆயிரம், கணக்கு தணிக்கைத் துறையில் 26 ஆயிரம், சுரங்கத்துறையில் 7 ஆயிரம், அணுசக்தி துறையில் 9 ஆயிரத்து 400, நீர்வளத்துறையில் 3 ஆயிரத்து 800 என மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 9 லட்சத்து 79 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், எஸ்.எஸ்.சி., ரெயில்வே தேர்வு வாரியம் போன்றவைகள் ஈடுபட்டு வருகின்றன.

கடந்த மாதம் 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். அதன் தொடர்ச்சியாக கடந்த 22-ந் தேதி அன்று 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன வழங்கும் முகாமையும் அவர் தொடங்கிவைத்தார்.

மு.க.ஸ்டாலினின் பெருமிதம்

தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசும் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பில் அதிக அக்கறை காட்டி வருகிறது.

பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வுகள் நடத்தி நிரப்பப்பட்டு வருகின்றன.

தமிழக போலீஸ்துறையில் 3ஆயிரத்து 552 போலீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கையில் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் ஈடுபட்டுள்ளது.

படித்த இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கித்தரும் பணியை தமிழக அரசின் தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டுத்துறை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி கடந்த ஆண்டு மட்டும் 419 முகாம்கள் நடத்தப்பட்டு 68 ஆயிரத்து 14 பேர் வேலை வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறார்கள்.

சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரியில் கடந்த மாதம் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசும்போது, 'தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 1 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது' என்று பெருமிதத்துடன் கூறினார். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் விரைவில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த வேண்டும் என்று தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சரை கேட்டுக்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி படிப்பை முடித்தவர்கள், பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் என அனைவரும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தங்களின் சான்றிதழ்களை பதிவு செய்து வேலை வாய்ப்புக்காக காத்திருக்கின்றன. அதன்படி 79 ஆயிரத்து 406 ஆண்கள், 92 ஆயிரத்து 217 பெண்கள் என மொத்தம் 1 லட்சத்து 71 ஆயிரத்து 623 பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு போட்டி தேர்வுகளும், தனியார் வேலை வாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மத்திய, மாநில அரசுகளின் இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் வேலை இல்லாத் திண்டாட்டம் குறைந்து இருக்கிறதா? வேலை வாய்ப்பு முகாம்கள் பலன் தருகிறதா? என்பது குறித்து பட்டதாரிகள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

கனவை நனவாக்க...!

திண்டுக்கல் சீலப்பாடியை சேர்ந்த உதவி பேராசிரியர் மலர்விழி:- நான் எம்.பில். பட்டதாரி. பள்ளி படிப்பு முதல் எம்.பில். படிப்பு வரை அனைத்து சான்றிதழ்களையும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளேன். மத்திய, மாநில அரசு பணிகளில் ஏதாவது ஒன்றை பெற வேண்டும் என்பது எனது கனவு. இதற்காக பல்வேறு போட்டி தேர்வுகளை எழுதி வருகிறேன்.

எனது படிப்பறிவுடன் பணி அனுபவமும் கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு நடத்தும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்களிலும் பங்கேற்றேன். அது பயன் உள்ளதாக இருந்தது. தற்போது தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை பார்க்கிறேன். அரசு பணியில் சேரும் எனது கனவை நனவாக்கவும் போராடி வருகிறேன்.

எதிர்காலம் குறித்த பயம் நீங்கும்

செந்துறையை அடுத்த மீனாட்சிபுரத்தை சேர்ந்த சந்தானலட்சுமி:- எம்.காம்., பி.எட். பட்டப்படிப்பு படித்துள்ளேன். மத்திய, மாநில அரசுகள் சார்பில் நடத்தப்படும் போட்டி தேர்வுகளில் தொடர்ந்து பங்கேற்கிறேன். அரசு பணியில் சேருவேன் என்ற நம்பிக்கை உள்ளது. அரசு சார்பில் நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்புகள், தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. வேலை தேடி அலையும் இளைஞர்கள் பலருக்கு இந்த முகாம்கள் மூலம் வேலை கிடைத்து வருகிறது.

நத்தம் கோவில்பட்டியை சேர்ந்த நல்லகுமார்:- கல்லூரி படிப்பை முடித்ததும் அரசு பணிக்காக பல்வேறு போட்டி தேர்வுகளை எழுதினேன். வேலைக்காக கம்பெனி, கம்பெனியாக ஏறி இறங்கினேன். அப்போது எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற கவலை கூட ஏற்பட்டது. பின்னர் ஒரு வழியாக தனியார் நிறுவனத்தில் ஊழியராக சேர்ந்தேன். ஆனால் தற்போது தமிழக அரசு சார்பிலேயே தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் அடிக்கடி நடத்தப்படுகின்றன. இதனால் கல்லூரி படிப்பை முடித்ததும் மாணவர்களுக்கு எதிர்காலம் குறித்த பயம் நீங்கும்.

முன்னுரிமை

பழனியை சேர்ந்த யோகேஷ்:- டிப்ளமோ இன் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் முடித்துள்ளேன். படிப்பு முடித்த காலகட்டத்தில் தனியார் நிறுவனங்களில் வேலை கிடைப்பது சற்று சிரமமாக இருந்தது. அரசு பணிக்கு செல்லலாம் என்றால் மத்திய அரசு பணிகளில் பெரும்பாலும் வடமாநிலத்தவர்களே இடம்பிடிக்கின்றனர். தமிழகத்தில் செயல்படும் மத்திய அரசு அலுவலகங்கள், ரெயில்வேத்துறை என அனைத்திலும் வடமாநிலத்தவர்களே பணியாற்றுகின்றனர். எனவே மத்திய அரசு பணிகளில் அந்தந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தமிழக அரசு பணிக்கான போட்டி தேர்விலும் பங்கேற்று வருகிறேன். விரைவில் அரசு பணி கிடைக்கும் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஐ.டி. துறையிலும்...

மத்திய-மாநில அரசு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கங்கள் முனைப்பு காட்டி வருவது படித்த இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டால் அரசு துறைகளில் சுணக்கம் குறைந்து பணிகள் வேகம் எடுக்கும் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் பிறந்துள்ளது.

கொரோனாவால் ஆட்டம் கண்ட தனியார் துறையும் தற்போது ஆட்கள் தேர்வில் கவனம் செலுத்தி வருகிறது. ஐ.டி. துறையில் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று 'இன்போசிஸ்' நிறுவனத்தின் இணை நிறுவனர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன் சமீபத்தில் அறிவித்திருப்பது என்ஜினீயரிங் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.


Next Story