சேலம் மாவட்டத்தில்36 மையங்களில் தமிழ்மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு10,685 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
சேலம் மாவட்டத்தில் 36 மையங்களில் தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு நேற்று நடந்தது. இதில், 10 ஆயிரத்து 685 மாணவ, மாணவிகள் பங்கேற்று தேர்வு எழுதினர்.
சேலம்
சேலம் மாவட்டத்தில் 36 மையங்களில் தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு நேற்று நடந்தது. இதில், 10 ஆயிரத்து 685 மாணவ, மாணவிகள் பங்கேற்று தேர்வு எழுதினர்.
திறனாய்வு தேர்வு
தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளின் தமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்தும் வகையில் தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு அரசு தேர்வுகள் இயக்கம் சார்பில் நேற்று நடத்தப்பட்டது. இந்த தேர்வின் மூலம் 1,500 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு பள்ளி கல்வித்துறை மூலம் மாதம் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்பட உள்ளது.
சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் சேலம், ஆத்தூர், எடப்பாடி, தலைவாசல், தாரமங்கலம், மேட்டூர், மேச்சேரி, இளம்பிள்ளை, சங்ககிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 36 மையங்களில் தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் 11 ஆயிரத்து 463 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பம் செய்திருந்தனர். ஆனால் 10 ஆயிரத்து 685 மாணவ, மாணவிகள் மட்டும் பங்கேற்று தேர்வெழுதினர். 778 பேர் தேர்வு எழுத வரவில்லை. காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை தேர்வு நடத்தப்பட்டது.
கண்காணிப்பு
36 தேர்வு மையங்களிலும் முறைகேடுகள் ஏதேனும் நடக்கிறதா? என்பதை முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் ஆகியோர் கண்காணித்தனர். 450 அறை கண்காணிப்பாளர்கள், 500-க்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.