கருணாநிதி பேனா நினைவு சின்னத்துக்கு ஒப்புதல்: கடலோர ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியது
சென்னை மெரினாவில் அமைய உள்ள கருணாநிதி பேனா நினைவு சின்னத்துக்கு கடலோர ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் வழங்கி இருக்கிறது.
சென்னை,
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் நினைவிடம் மெரினாவில் அண்ணா சமாதி அருகே அமைந்துள்ளது.
பேனா நினைவுச்சின்னம்
இந்நிலையில் கருணாநிதியின் இலக்கிய பணிகளை போற்றும் வகையில் சென்னை மெரினா கடல் பகுதியில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்தில் பிரமாண்ட பேனா நினைவுச்சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.
இந்த நினைவு சின்னம்3 பகுதிகளாக கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில், கருணாநிதி நினைவிடத்தில் இருந்து கடற்கரை வரை 220 மீட்டர் நீளம், 6 மீட்டர் உயரத்தில் கான்கிரீட் பாலம் கட்டவும், கான்கிரீட் பாலம் முடிவடையும் மணல் பரப்பில் இருந்து கடலுக்குள் சில மீட்டர் நீளத்தில் இரும்பு பாலம் அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பேனா நினைவு சின்னம் 30 மீட்டர் உயரமும், 3 மீட்டர் விட்டமும் கொண்டதாக 8 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்படுகிறது. நினைவுச்சின்னத்தை அணுகும் பாலம் 9 மீட்டர் அகலமும், கடல் பரப்பு மற்றும் மணல் பரப்பில் இருந்து6 மீட்டர் உயரமும் கொண்டதாக கட்டப்பட உள்ளது.
ஒப்புதல்
பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு ஏற்கனவே ஒப்புதல் வழங்கிய நிலையில் மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின்அனுமதி கோரி தமிழக அரசு விண்ணப்பித்தது.
இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த கடலோர ஒழுங்குமுறை ஆணையம், மெரினா கடல்பகுதியில் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது.
15 நிபந்தனைகள்
மேலும், 'ஐஎன்.எஸ் அடையாறு கடற்படை தளத்தில் தடையில்லா சான்று பெற வேண்டும். கட்டுமான பணிகளுக்காக எந்தவொரு நிலையிலும் கடற்கரை பகுதியில் இருந்து நிலத்தடி நீரை எடுத்து பயன்படுத்தக்கூடாது. திட்டத்தை செயல்படுத்தும் போது நிபுணர் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். அவசரகால மீட்புப்பணி தொடர்பான விரிவான திட்டம் தீட்டப்பட வேண்டும். ஆமை இனப்பெருக்க காலத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளக் கூடாது.
தேசிய கடலோர ஆராய்ச்சி மையம், மண் அரிப்பு, மணல் திரட்சி குறித்து கண்காணிக்க வேண்டும், கட்டுமான பணிகளின் போது தோண்டி எடுக்கப்படும் மணல் உள்ளிட்டவற்றை நீர்நிலை பகுதிகளில் கொட்டக்கூடாது. கட்டுமான பணிகளுக்காக அமைக்கப்படும் தற்காலிக கட்டமைப்புகளை கட்டுமான பணிகள் நிறைவு பெற்றதும் அகற்றி விட்டு பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும்' என்பது உள்ளிட்ட 15 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
விரைவில் பணிகள் தொடங்கும்
மேலும், இந்த திட்டத்தை செயல்படுத்தும் நடைமுறைகள் தொடர்பாக தவறான தகவல் அளிக்கப்பட்டால் அனுமதி வாபஸ் பெறப்படும் என்றும் அந்த ஒப்புதல் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருணாநிதி பேனா நினைவு சின்னத்துக்கு மத்திய அரசின் அனைத்து அனுமதிகளும் கிடைத்திருப்பதால் விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.