உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது சட்டம்-ஒழுங்கை பராமரிக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் பழனி அறிவுரை கூறினார்.
ஆலோசனைக்கூட்டம்
விழுப்புரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து காவல்துறை, மின்சாரத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட சிலை அமைப்பினர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பழனி தலைமை தாங்கி பேசியதாவது:-
தூய களிமண்ணால்
வழிபாட்டுக்காக அமைக்கப்படும் விநாயகர் சிலையானது தூய களிமண்ணால் செய்யப்பட்டிருக்க வேண்டும். ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. நீரில் கரையக்கூடிய மற்றும் நச்சுத்தன்மையற்ற இயற்கை சாயங்களை பயன்படுத்த வேண்டும். சிலை நிறுவ தற்காலிக கொட்டகை, பந்தல் அமைக்கும்போது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சிலை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இடத்தின் அருகில் இதர வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள் இல்லாதவண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பூஜைக்காக காலை 2 மணி நேரம், மாலை 2 மணி நேரம் மட்டுமே ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்த அனுமதி வழங்கப்படும். கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தக்கூடாது. பொது அமைதி, பொதுமக்கள் பாதுகாப்பு, மத நல்லிணக்கம் பாதுகாப்பது தொடர்பாக வருவாய்த்துறை, காவல்துறை, மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர்களால் விதிக்கப்படும் நிபந்தனைகளை அமைப்பாளர்கள் கடைபிடிக்க வேண்டும்.
பாதுகாப்பு நடவடிக்கை
விநாயகர் சிலைகளை கிழக்கு கடற்கரையில் மரக்காணம் முதல் கோட்டக்குப்பம் வரை (பொம்மியார்பாளையம், கைப்பானிக்குப்பம், எக்கியார்குப்பம்), அரகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் குளம், வீடூர் அணை ஆகிய இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும். விநாயகர் சிலை நிறுவும் இடங்கள், கரைக்கப்படும் இடங்கள், ஊர்வலம் செல்லும் பாதைகளில் பட்டாசு வெடிக்க அனுமதி கிடையாது. சிலைகள் கரைக்கப்படக்கூடிய இடங்களில் தடுப்பு ஏற்படுத்தி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும்.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது சட்டம்- ஒழுங்கை பராமரிக்க காவல்துறையினர் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். கடலோரம் மற்றும் நீர் நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்கும்போது விபத்துகளை தவிர்க்க ஏதுவாக தேவையான உபகரணங்கள் மற்றும் நீச்சல் தெரிந்த நபர்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) ஹரிதாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.