மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - முத்தரசன்


மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - முத்தரசன்
x

கோப்புப்படம் 

போலீசார் குற்றவாளிகளை பாதுகாக்க முயல்வது கண்டனத்திற்குரியது என்று முத்தரசன் கூறியுள்ளார்.

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி வட்டம் சாரண்டபள்ளி கிராமத்தை சேர்ந்த பெண் பாலக்கோடு, அறிவியல் கல்லூரியில் படித்து வருகின்றார். அதே பகுதியைச் சேர்ந்த சுபாஸ் என்பவர் மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததுடன், கடந்த 15.09.2024 அன்று மேற்கண்ட நபருடன் 15 பேர் கும்பலாக சென்று, மாணவியை மிரட்டி கடத்தி செல்ல முயன்றுள்ளனர்.

இது குறித்து மாணவியின் பெற்றோர் தளி காவல் நிலையத்தில் 16.09.2024 அன்று புகார் அளித்துள்ளனர். புகார் மீது நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்வதற்கு மாறாக, குற்றவாளிகளை பாதுகாப்பது மட்டுமின்றி, புகார் கொடுத்தவர்களை மிரட்டி, வழக்கை திரும்ப பெற வேண்டுமென்று வற்புறுத்துவது மட்டுமல்ல, திரும்ப பெறாவிட்டால் மாணவியின் புகைப்படத்தை பொது வெளியில் வெளியிடுவோம் என அச்சுறுத்துவது கடும் கண்டனத்திற்குரியது.

தமிழ்நாடு அரசு, குறிப்பாக முதல்-அமைச்சர் சமூக விரோத சக்திகள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள் என அறிவித்து நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்நிலையில் முதல்-அமைச்சரின் நிலைப்பாட்டிற்கு எதிராக, தளி காவல் துறை செயல்படுவது வியப்பை அளிக்கின்றது. மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்கள் மீது உரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story