அரிமா 324 எப் மாவட்ட ஆளுனர், துணை ஆளுனர்களுக்கு பாராட்டு விழா
பெரம்பலூரில் அரிமா 324 எப் மாவட்ட ஆளுனர், துணை ஆளுனர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
அரிமா 324 எப் மாவட்டத்தில், மாவட்ட ஆளுனராக பெரம்பலூர் இமயவரம்பன், மாவட்ட துணை ஆளுனர்களாக தஞ்சை சவரிராஜ் (முதல்நிலை) மணிவண்ணன் (2-ம் நிலை) ஆகியோர் திருச்சியில் நடந்த அரிமா மாவட்ட மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு மாவட்ட அரிமா சார்பில் பாராட்டு விழா பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மகாலில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு அரிமா மாவட்ட தற்போதைய ஆளுனர் சேது சுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
அரிமா பன்னாட்டு நிதியத்தின் 324 எச். மாவட்டத்தின் உதவி ஏரியா தலைவர் மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பாராட்டி பேசினார். விழாவில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாச ரெட்டியார், தந்தை ரோவர் கல்விக் குழுமத்தின் நிறுவனத்தலைவர் ரோவர் வரதராஜன், ஸ்ரீ ராமகிருஷ்ணா மற்றும் ஸ்ரீ சாரதா கல்வி குழுமத்தின் நிறுவனத் தலைவர் சிவசுப்பிரமணியன், தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத்தின் செயலாளர் நீலராஜ் ஆகியோர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாவட்ட துணை ஆளுனர்-2 மற்றும் கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட துணை ஆளுனர்-1 மற்றும் 2023-24 அரிமா ஆண்டின் மாவட்ட ஆளுநராக அமெரிக்காவிற்கு சென்று பதவி ஏற்றுள்ள இமயவரம்பன் ஆகியோரை வாழ்த்தியும், மாவட்ட ஆளுனரின் தலைமையின் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட அவைச்செயலாளர், பொருளாளர் மற்றும் அனைத்து நிலை அலுவலர்களையும் சிறப்பாக சேவை புரியுமாறு கூறி பாராட்டி பேசினார்கள்.
விழாவில் ஆளுனர், துணை ஆளுனர்களுக்கு பெரம்பலூர் அரியலூர், ஜெயங்கொண்டம், தஞ்சை உள்ளிட்ட அரிமா சங்கங்களின் சார்பில் ரோஜா மலர் மாலை அணிவித்தும் சால்வைகள் அணிவித்தும் கவுரவிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆளுனர் (தேர்வு) இமயவரம்பன் பேசும்போது, 2023-24 அரிமா ஆண்டில் மேற்கொள்ளப்பட உள்ள சிறப்பு திட்டங்கள் (இமயம்) குறித்தும், புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள மாவட்ட அவை நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தும் பேசினார்.
விழா ஏற்பாடுகளை நிகழ்ச்சி செயலாண்மை குழு தலைவர் தமிழ்மாறன், செயலாளர் கலாம்ஸ் பாக்கியராஜ். பொருளாளர் கோகுலம் குணசீலன் மற்றும் பெரம்பலூர் விக்டரி அரிமா சங்கத்தின் தலைவர், ரியல் எஸ்டேட் தினேஷ்குமார், செயலாளர்கள் என்ஜினியர் ரசீத்அஹமது, டாக்டர் மணிகண்டன். பொருளாளர் நவுஷத் அலி மற்றும் சங்க உறுப்பினர்கள், பெரம்பலூர் டவுன் அரிமா சங்கம், பெரம்பலூர் எம்.ஜே.எப். சுப்ரீம் அரிமா சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.