336 பேருக்கு பணி நியமன ஆணை
336 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
காரைக்குடி,
காரைக்குடி உமையாள் ராமநாதன் மகளிர் கலைக்கல்லூரியில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. நிகழ்ச்சியில் கலெக்டர் ஆஷா அஜீத் கலந்து கொண்டு 336 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் வேலைநாடுநர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு பகுதிகளில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 2-வது தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் அரசால் நடத்தப்படும் இதுபோன்று வேலைவாய்ப்பு முகாம்களில் இளைஞர்கள் பங்கு பெற்று வேலைவாய்ப்பை பெற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு கூறினார்.
இதில், ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் வானதி, சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் சரண்யா செந்தில்நாதன், உதவி இயக்குனர் (திறன் வளர்ப்பு) கர்ணன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் ராஜலெட்சுமி, மணிகணேஷ், காரைக்குடி உமையாள் ராமநாதன் மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் ஹேமாமாலினி மற்றும் பலர் பங்கேற்றனர்.