சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி துறையில் 130 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை
சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி துறையில் 130 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை,
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையில் தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்து 541 சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி, யுனானி, யோகா மற்றும் இயற்கை பிரிவுகள் உள்ளன. இதன்மூலம் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை மக்களுக்கு மருத்துவ சேவையாற்றி வருகிறது. கொரோனா தொற்று காலங்களில் சித்தா மருத்துவ பிரிவுகளில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. மேலும் தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலையின்போது 79 சிறப்பு சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டு, இம்மையங்களின் வாயிலாக சுமார் 70 ஆயிரம் மக்கள் பயனடைந்துள்ளனர்.
தேர்வுகள்
அரசு ஆஸ்பத்திரிகளில் சித்தா, ஆயுர்வேதா மற்றும் ஓமியோபதி மருத்துவத்தின் செயல்பாட்டை மேலும் மேம்படுத்தும் வகையில், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ் இயங்கும் இந்திய மருத்துவப் பிரிவு உள்ள அரசு தலைமை ஆஸ்பத்திரிகள், அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருந்தகங்களில் காலியாக உள்ள உதவி டாக்டர் (ஆயுஷ்) பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு சென்னையில் 2 மையங்களில் இதற்கான தேர்வுகள் நடைபெற்றன.
பணி நியமன ஆணை
அதன்படி, தேர்வு செய்யப்பட்ட 130 சித்தா, ஆயுர்வேதா மற்றும் ஓமியோபதி டாக்டர்களுக்கு உதவி டாக்டர் பணியிடத்துக்கான பணி நியமன ஆணைகளை வழங்குவதற்கு அடையாளமாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 15 உதவி டாக்டர்களுக்கு ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ப.செந்தில்குமார், மருத்துவத் தேர்வு வாரியத் தலைவர் ஏ.ஆர்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.