ராமநாதபுரம், திருப்பத்தூர், திருப்பூர் மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் -தமிழக அரசு உத்தரவு
ராமநாதபுரம், திருப்பத்தூர், திருப்பூர் மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளாக 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
சென்னை,
தமிழக அரசின் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலப் பணிகளை மாவட்டங்கள் தோறும் கண்காணிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அந்த கண்காணிப்பு அதிகாரிகள் மற்றும் துறை செயலர்கள் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது.
மேலும், ஜூலை 19-ந்தேதி முதல் (நேற்று) கண்காணிப்பு அதிகாரிகள் மாவட்டம் தோறும் ஆய்வு நடத்த வேண்டும் என்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ராமநாதபுரம், திருப்பத்தூர், திருப்பூர் மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் இல்லை என்பதால் புதிய அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். அதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலராக ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் அர்ச்சனா பட்நாயக்; திருப்பத்தூருக்கு வேளாண்துறை சிறப்பு செயலாளர் நந்தகோபால்; திருப்பூருக்கு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
என்னென்ன பணிகள்?
இவர்கள் அந்தந்த மாவட்டங்களில் நீர் பாதுகாப்பு, குடிமராமத்து, தடுப்பணைகள் கட்டுதல், குளங்கள், ஊரணிகள், கோவில் குளங்கள், சிறுபாசன ஏரிகள் மற்றும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பாசன ஏரிகள் ஆகியவற்றை கண்கணிப்பார்கள். ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளை மீட்டுருவாக்கம் செய்வது உள்ளிட்ட பணிகளை பொதுமக்கள் பங்களிப்புடன் மேற்கொள்வார்கள்.
அரசின் முத்திரைத் திட்டங்களை விரைவாக அமலுக்கு கொண்டு வருவது, நிலுவையில் உள்ள அதிக அளவிலான பட்டா மாற்றப் பணிகளை கண்காணித்தல், பொதுமக்கள் குறைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கட்டிடங்களில் விதிமீறல்கள், புறம்போக்கு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றுதல் உள்பட பல்வேறு பணிகளை கண்காணிப்பார்கள்.
பிளாஸ்டிக் தடை
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் சாலை, குடிநீர், தெருவிளக்கு, கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துவதுடன், பிளாஸ்டிக் தடையை அனைத்து பகுதிகளிலும் அமல்படுத்துவதை கண்காணிப்பார்கள். பள்ளிகள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடிகளில் குடிநீர், மின்வசதி, கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தும் பணியையும் கண்காணிப்பார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.