தற்காலிக ஆசிரியர் நியமன பணிகளை வேகப்படுத்த வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு


தற்காலிக ஆசிரியர் நியமன பணிகளை வேகப்படுத்த வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
x

தற்காலிக ஆசிரியர் நியமன பணிகளை வேகப்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் 2022-2023-ம் கல்வி ஆண்டில் கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதி நிலவரப்படி காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு்ள்ளது.

இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் கல்வி மாவட்டங்களில் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் முறையிலோ தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி தற்காலிக ஆசிரியர் பணிக்கு 24 மாவட்டங்களில் மொத்தம் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த நிலையில், தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்ய அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான பணிகளை வேகப்படுத்த வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், TRB நடத்திய சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களை மட்டுமே தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்ய வேண்டும்.

அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் வரும் 15-ம் தேதிக்குள் தகுதியானவர்களை தேர்வு செய்ய வேண்டும். தேர்வானவர்களின் பட்டியலை சரிபார்த்து வரும் 18-ம் தேதிக்குள் CEO-க்கள் ஒப்புதல் தர வேண்டும்.

தற்காலிக ஆசிரியராக தேர்வானோர் வரும் 20-ம் தேதி அவரவருக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் பணியில் சேர வேண்டும். 24 மாவட்டங்களில் மட்டும் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story