தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்: புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு


தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்: புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
x
தினத்தந்தி 2 July 2022 9:53 AM IST (Updated: 2 July 2022 10:00 AM IST)
t-max-icont-min-icon

தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ளார்.

சென்னை,

அரசுப்பள்ளிகளில் காலியாகவுள்ள 13 ஆயிரத்து 300 பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை பணிநியமனம் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வி ஆணையர் கடந்த வாரம் வெளியிட்டிருந்தார். இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் என்று 3 வகையான ஆசிரியர்களை நியமனம் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த பணிநியமனங்களை அந்தந்த பள்ளிகளில் இருக்கக்கூடிய பள்ளி நிர்வாகக்குழுவே மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல் அவரவர் விருப்பத்திற்கேற்ப ஆசிரியர்களை நியமனம் செய்வதாக புகார்கள் எழுந்தன.

இதுதொடர்பாக ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் தொடரப்பட்ட வழக்கில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவு அடிப்படையில் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ளார்.

அதில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கல்வித்தகுதி அடிப்படையில் சரியான முறையில் இந்த பணிநியமனங்களை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதன்படி அனைத்து அரசுப் பள்ளிகளிலும் காலியாக இருக்கக்கூடிய விவரங்களை எல்லாம் அறிவிப்பு பலகையில் இன்று வெளியிட வேண்டும் என்றும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் வருகிற 4-ந்தேதி முதல் 6ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் மூலமாக நேரிலோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்களை எல்லாம் ஆய்வு செய்து 6-ந்தேதி இரவு 8 மணிக்குள்ளாக அனைத்து விண்ணப்பங்களின் விவரங்களையும் பள்ளிக்கல்வி ஆணையருக்கு அனுப்ப வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சுற்றறிக்கையில், தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களின் பணி திருப்தியளிக்கவில்லை என்றால் உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story