புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்: ஆள் இல்லாத கடையில் ஓ.பன்னீர்செல்வம் டீ ஆற்றுகிறார் ஜெயக்குமார் கிண்டல்


புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்: ஆள் இல்லாத கடையில் ஓ.பன்னீர்செல்வம் டீ ஆற்றுகிறார் ஜெயக்குமார் கிண்டல்
x

ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் புதிதாக மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளது என்பது, ஆள் இல்லாத கடையில் டீ ஆற்றும் கதைதான் என்று ஜெயக்குமார் கிண்டல் செய்துள்ளார்.

சென்னை,

தி.மு.க. அரசின் சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னையில் மட்டும் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை (புதன்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் ஆர்ப்பாட்டம் இது.

எனவே, இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைந்த சென்னையில் உள்ள அ.தி.மு.க. அமைப்பு ரீதியிலான 9 மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர்களை ஒருங்கிணைத்து மிகப்பெரிய அளவில் திரளான கூட்டத்தை கூட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் மாவட்ட செயலாளர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் நா.பாலகங்கா, விருகை வி.என்.ரவி, கே.பி.கந்தன், டி.ஜி.வெங்கடேஷ்பாபு, தியாகராயநகர் சத்யா, ஆர்.எஸ்.ராஜேஷ் உள்ளிட்ட அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஆர்ப்பாட்டத்திற்கு ஒவ்வொரு மாவட்ட செயலாளரும் எவ்வளவு ஆட்களை திரட்டி வர வேண்டும். ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது எப்படி என்பது போன்ற ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

கூட்ட முடிவில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரதமர் மோடியை சந்திப்பார்

ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவியேற்பு நிகழ்ச்சியில் தம்பிதுரை எம்.பி. கலந்து கொண்டுள்ளார். ஒரு பக்கம் ஜனாதிபதி தேர்தல், துணை ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் என்ற நெருக்கடியான சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி - பிரதமர் மோடி சந்திப்பு நடைபெறவில்லை. வேறு ஒரு நாளில் இந்த சந்திப்பு இருக்கும். நாங்கள் சந்திக்கிறோம் என்று கேட்டு அவர்கள் வாய்ப்பு தரவில்லை என்று தெரிவிக்கவில்லை. இது வேண்டுமென்றே பரப்பக்கூடிய செய்தியாகத்தான் கருதுகிறேன்.

பிரதமர் சென்னை வரும்போதெல்லாம் அ.தி.மு.க. சார்பில் மக்கள் பிரச்சினைகள் தொடர்பான கோரிக்கை மனு அளிப்போம். இதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. அந்த வகையில் அ.தி.மு.க. சார்பில் பொதுக்குழுவால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ள இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாநிலத்தின் நலன் கருதி மக்கள் விரோத ஆட்சியின் செயல்பாடுகளை எடுத்துச்சொல்வதற்கு பிரதமர் மோடியை சந்திப்பார்.

ஆள் இல்லாத கடையில்...

ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் புதிதாக மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளது என்பது, ஆள் இல்லாத கடையில் டீ ஆற்றும் கதைதான். ஒட்டு மொத்தமாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி தற்போது செயலாற்றி வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஒருசிலரை நியமித்து விட்டு நான்தான் கட்சி என்றால் அது எள்ளி நகையாடக்கூடிய விஷயமாகத்தான் பார்க்க முடியும்.

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம், கல்விக்கடன் ரத்து, மாதந்தோறும் இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, சமையல் கியாஸ் மானியம், முதியோர் உதவித்தொகை உயர்வு போன்று மக்கள் எதிர்பார்க்கின்ற வாக்குறுதிகளை நிறைவேற்ற நிதி இல்லை என்று சொல்லிவிட்டு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தந்தையின் புகழ்பாட வேண்டும் என்பதற்காக ஊர்தோறும் சிலை வைப்பதற்கு எங்கிருந்து பணம் வருகிறது. கருணாநிதியின் புகழ்பாடுவதில் தவறில்லை.

ஆனால், அவர்களின் அறக்கட்டளையில் ஏகப்பட்ட பணம் உள்ளது. அதிலிருந்து எடுத்து செலவு செய்யலாமே தவிர, மக்கள் வரிப்பணத்தில் செய்யக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story