கவர்னர்கள் நியமனம் என்பது அரசியல் நியமனமாக மாறி உள்ளது- டி.ராஜா விமர்சனம்
கவர்னராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பாஜகவை சேர்ந்தவர்கள் மட்டும் கவர்னர்களாக தொடர்ந்து நியமிக்கப்பட்டு வருகின்றனர்
கோவை,
கோவையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நாட்டில் நிலவும் தேசிய பிரச்சினைகள், பாராளுமன்றம் செயல்படும் விதம் மிகுந்த கவலை அளிக்கிறது. பாராளுமன்ற பட்ஜெட்டை ஆழமாக ஆய்வு செய்து பார்த்தபோது இது ஏழைகளுக்கு எதிரான பட்ஜெட்டாகவும், செல்வந்தர்களை தங்கள் பக்கம் ஈர்க்கும் பட்ஜெட்டாகவும் இருக்கிறது என்பது தெளிவாக புரிகிறது.
பா.ஜ.க ஆட்சியில் கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரும் வளர்ச்சி பெற்று வருகின்றன. மத்திய அரசு மாநில அரசின் உரிமைகளை பறிக்கின்றன. ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் பா.ஜ.க. அரசை அகற்ற வேண்டும். 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க அரசு வீழ்த்தப்பட வேண்டும். இதற்கு மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
கவர்னர்கள் நியமனம் என்பது அரசியல் நியமனமாக மாறி உள்ளது. தற்போது சி.பி ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இது ஒன்றும் புதியது அல்ல. முன்னதாக எல். கணேசன், தமிழிசை சவுந்தர்ராஜன் கவர்னராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பாஜகவை சேர்ந்தவர்கள் மட்டும் கவர்னர்களாக தொடர்ந்து நியமிக்கப்பட்டு வருகின்றனர். பா.ஜ.க நியமிக்கும் கவர்னர்கள் மத்திய அரசின் பிரதிநிதிகளாக செயல்பட்டு வருகின்றனர்" என்றார்.