254 உதவி பேராசிரியர்களின் நியமனம் ரத்து - சென்னை ஐகோர்ட்டு அதிரடி..!


254 உதவி பேராசிரியர்களின் நியமனம் ரத்து - சென்னை ஐகோர்ட்டு அதிரடி..!
x

பச்சையப்பன் கல்வி அறக்கட்டளையின் கீழ் பணிபுரியும் 254 உதவி பேராசிரியர்களின் நியமனத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் கடந்த 2013, 2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் 254 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த 254 பேரில் 152 பேர் உரிய தகுதியை பெற்றிருக்கவில்லை எனவும், தேர்வு நடைமுறைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன.

அறக்கட்டளையை நிர்வகித்த ஓய்வுபெற்ற நீதிபதி, 152 உதவிப் பேராசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இது சம்பந்தமான வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், கடந்த 2013, 2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்ட 254 உதவிப் பேரிரியர்களின் கல்வித்தகுதியை ஆராய வேண்டும் எனக் கூறி, இவர்களின் கல்விச் சான்றுகளை பெற்று சரிபார்க்க உத்தரவிட்டிருந்ததார்.

இதை எடுத்து கல்லூரி கல்வி இயக்குனர் 254 உதவி பேராசிரியர்களின் கல்வித் தகுதியை ஆய்வு செய்து சென்னை ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தார். அதில் ஆசிரியர் பணி அனுபவத்துக்கு வழங்கப்படும் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முறையாக தேர்வு நடைமுறைகளை பின்பற்றாமல் நியமிக்கப்பட்ட 254 உதவி பேராசிரியர்களின் நியமனமும் செல்லாது என உத்தரவிட்டார். உதவி பேராசிரியர் தேர்வு தொடர்பாக அகில இந்திய அளவில் விண்ணப்பங்களை வரவேற்கவில்லை என்றும் நியமனத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் நீதிபதி தனது உத்தரவில் சுட்டிக்காட்டி உள்ளார்.


Next Story