தமிழ் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள் தமிழ் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் தமிழ் தொண்டாற்றி வரும் தமிழ் ஆர்வலர்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ் செம்மல் விருது வழங்கப்படுகிறது. இந்த தமிழ் செம்மல் விருது மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இதில் விருதும், ரூ.25 ஆயிரம் மற்றும் தகுதியுரையும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த 2023-ம் ஆண்டுக்கான தமிழ் செம்மல் விருதுக்கு, தமிழ் ஆர்வலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள் www.tamilvalarchithurai.com எனும் இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
அந்த விண்ணப்பத்துடன் தன்விவர குறிப்பு, நூல்கள், கட்டுரை வெளியிட்டு இருந்தால் அதன் விவரம், தமிழ் சங்கங்கள் மற்றும் தமிழ் அமைப்புகளில் பொறுப்பில் அல்லது உறுப்பினராக இருந்தால் அதன் விவரம், தமிழ் அமைப்புகளின் பரிந்துரை கடிதம், 2 புகைப்படங்கள், தமிழ் பணிக்கான சான்றுகள் ஆகியவற்றை இணைத்து அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந்தேதிக்குள், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என்று கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.