தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனைக்கு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனைக்கு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்
x

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனைக்கு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

வருகிற 15-ந்தேதிக்குள்...

தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (நவம்பர்) 12-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் வெடிபொருள் விதிகள் 2008-ன் கீழ் தற்காலிக பட்டாசு சில்லறை வணிகம் செய்ய, இருப்பு வைத்துக்கொள்ள தற்காலிக உரிமம் கோரும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்படி உரிமத்தை பெறுவதற்கு தங்களது விண்ணப்பத்தை வருகிற 15-ந் தேதிக்குள் இ-சேவை மையங்களில் இணையதளம் மூலமாக கீழ்கண்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

தற்காலிகமாக பட்டாசு விற்பனை உரிமம் கோரும் புலம் 9 ச.மீ. முதல் 25 ச.மீ. வரை உள்ளடக்கியதாகவும், புலத்தினை குறிக்கும் புல வரைபடத்தில் சாலை வசதி, சுற்றுப்புறத் தன்மை மற்றும் கடையின் கொள்ளளவு ஆகியவற்றினை தெளிவாக குறிப்பிட்டு காட்டும் புல வரைபடம், உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளர் மனுதாரராக இருப்பின், அதற்கான ஆவணங்கள் மற்றும் நடப்பு நிதி ஆண்டில் வீட்டு வரி செலுத்திய ரசீது நகல் ஆகிய வழிமுறைகளை கடைப்பிடித்து விண்ணப்பிக்க வேண்டும்.

கட்டணம்

வாடகை கட்டிடம் என்றால், உரிமையாளர் வீட்டு வரி செலுத்திய அசல் ரசீது நகலுடன், கட்டிட உரிமையாளரிடம் ரூ.20-க்கான முத்திரைத்தாளில் பெறப்பட்ட அசல் சம்மதக் கடிதம், உரிமத்திற்கான கட்டணம் ரூ.500 அரசு கணக்கில் செலுத்தியமைக்கான அசல் செலுத்து சீட்டு, மனுதாரரின் பாஸ்போர்ட் அளவுள்ள வண்ண புகைப்படம், இருப்பிடத்திற்கான ஆதாரம் (ஆதார் கார்டு அல்லது குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை) ஆகிய வழிமுறைகளை கடைபிடித்து விண்ணப்பிக்க வேண்டும்.

குறிப்பிட்ட காலக்கெடுவிற்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்களும், வெடிபொருள் விதிகள் 2008-ன் நிபந்தனைகளை கடைபிடிக்காத விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படாது. உரிமமின்றி பட்டாசு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.


Next Story