தேவாலயங்களை சீரமைக்க நிதி உதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்


தேவாலயங்களை சீரமைக்க நிதி உதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்
x

தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு அரசு நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டம் 2016-17 முதல் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் தேவாலயங்களில் ஏற்பட்டுள்ள பழுதுகள் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக தேவாலயங்களில் ஏற்பட்டுள்ள பழுதுகள் மற்றும் தேவாலய கட்டிடத்தின் வயது போன்றவற்றை கருத்தில் கொண்டு 10-15 ஆண்டுகள் வரை இருப்பின் ரூ.1 லட்சமும், 15-20 ஆண்டுகள் வரை இருப்பின் ரூ.2 இலட்சமும் 20 ஆண்டுகளுக்கு மேல் இருப்பின் ரூ.3 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறுவதற்கு தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டிடத்தில் இயங்கி இருத்தல் வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

தேவாலயத்தின் சீரமைப்பு பணிக்காக வெளி நாட்டில் இருந்து எந்த வித நிதி உதவியும் பெற்றிருத்தல் கூடாது. சான்றிதழ் (பிற்சேர்க்கை-III) அளிக்க வேண்டும்.

சீரமைப்பு பணிக்காக ஒரு முறை நிதி உதவி அளிக்கப்பட்ட தேவாலயத்திற்கு மறுமுறை நிதி உதவி 5 ஆண்டுகளுக்கு பின்னர் வழங்கப்படும்.

விண்ணப்பப்படிவம் மற்றும் சான்றிதழ் இணையதள முகவரியில் www.bcmbcmw@tn.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப படிவத்தை அதிலுள்ள பிற்சேர்க்கை-II - III உள்ளவாறு பூர்த்தி செய்து அனைத்து உரிய ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களோடு மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழுவினரால் அந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தேவாலயங்களை ஆய்வு செய்து, கட்டிடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு போன்றவற்றுடன் தகுதியின் அடிப்படையில் நிதி உதவி வேண்டி மாவட்ட கலெக்டரால் பரிந்துரை செய்யப்படும்.

நிதி உதவி 2 தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக்கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும்.

எனவே தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி பெறுவதற்கு விண்ணப்பித்து பயனடையலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story