தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு விற்பனைக்கு தற்காலிக உரிமம் பெற விண்ணப்பம்- செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்
தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு விற்பனைக்கு தற்காலிக உரிமம் பெற வருகிற 30-ந் தேதி விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
30-ந் தேதி வரை அவகாசம்
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தீபாவளி பண்டிகையையொட்டி வெடிபொருள் விதிகள் 2008-ன் கீழ், செங்கல்பட்டு மாவட்டத்தில் தற்காலிகமாக பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்கள் தற்காலிக உரிமம் பெற கீழ்வரும் ஆவணங்களுடன் வருகிற 30-ந் தேதி வரை இ-சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
கடை அமைவிடத்திற்கான சாலை வசதி, கொள்ளளவு சுற்றுப்புறங்களைக் குறிக்கும் வகையிலான வரைபடம் மற்றும் கட்டடத்திற்கான புளூ பிரிண்ட் வரைபடம் கடை உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் சொந்த இடமாக இருப்பின் அதற்கான ஆதாரம் அல்லது வாடகை கட்டடமாக இருப்பின் வாடகை ஒப்பந்தப்பத்திரம் மற்றும் உரிமத்தினை காட்டும் ஆவணம் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.
சட்ட பூர்வ நடவடிக்கை
மேலும், உரிமத்திற்கான கட்டணம் ரூ.500 அரசு கணக்கில் செலுத்தியமைக்கான அசல் சலான். இருப்பிடத்திற்கான ஆதாரம் (ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, புகைப்படம், பாஸ்போர்ட் சைஸ்) குடும்ப அட்டை, வரி ரசீது தங்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? அல்லது நிராகரிக்கப்பட்டதா? என்ற விவரம் ஆன்லைன் மூலமாகவே தெரிவிக்கப்படும். தற்காலிக உரிமத்தின் ஆணையினை தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதத்தின் முன்பாகவே இ-சேவை மையம் மூலமாகவே பதிவிறக்கம் செய்ய முடியும்.
மேற்கண்ட தேதிக்கு பின் ஆன்லைனில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மேலும் நிரந்தர பட்டாக விற்பனை உரிமம் கோருவோர் மற்றும் வருடாந்திர உரிமம் புதுப்பித்தலுக்கு இவ்வழிமுறை பொருந்தாது. உரிமம் இன்றி பட்டாசு செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சட்ட பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.