மருத்துவமனைகளை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டுகோள்
மருத்துவமனைகளை தூய்மையாக வைத்துக்கொள்ள பொதுமக்கள் உதவ வேண்டும் என தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனர் சாந்திமலர் கூறினார்.
ஆய்வு
கரூர் காந்திகிராமத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையை தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனர் சாந்திமலர் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது புறநோயாளிகள் பிரிவு, பொது மருத்துவம், குழந்தைகள் நல பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, ஊசிபோடும் பிரிவு.
கண் மருத்துவம் வெளிநோயாளிகள் பிரிவு, காது, மூக்கு, தொண்டை, வெளிநோயாளிகள் பிரிவு, பல் மருத்துவ பிரிவு, தோல் மற்றும் பால்வினை நோய்கள் பிரிவு, மருந்து, மாத்திரை வழங்கும் இடம் உள்பட மருத்துவமனையில் உள்ள அனைத்து பிரிவுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பேட்டி
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கரூர் மருத்துவக்கல்லூரியின் டெவலப்மெண்ட் எப்படி உள்ளது. மாணவர்களுக்கு பாடங்கள் கற்றுத்தருவது எவ்வாறு உள்ளது என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் மருத்துவமனைக்கு எவ்வளவு நோயாளிகள் வருகிறார்கள். அவர்களுக்கு என்னென்ன வசதிகள் இருக்கிறது. என்னென்ன வசதிகள் தேவைப்படுகிறது என்பதையும் ஆய்வு செய்தோம்.
தூய்மையாக வைத்துக்கொள்ள...
நோயாளிகள் எண்ணிக்கை, தேவைப்படும் வசதிகள் குறித்து அரசுக்கு தெரிவித்து அதன்மூலம் நிதிகள் பெற்று மருத்துவமனைகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு நடைபெற்றது. மருத்துவமனைகளில் அதிகளவில் நோயாளிகள் இருப்பதால், அவர்களை பார்க்க வருபவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்போது அவர்களுக்கு நோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் தேவையில்லாமல் மருத்துவமனைக்கு பொதுமக்கள் வருவதை தவிர்க்க வேண்டும்.
மேலும் குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்து வருவதை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகளை தூய்மையாக வைத்துக்கொள்ள பொதுமக்கள் உதவ வேண்டும். கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் 1000 முதல் 1,500 வரை நோயாளிகள் வந்து செல்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் தாமோதரன், டாக்டர்கள், நர்சுகள் உடனிருந்தனர்.