குற்றாலம் சாரல் திருவிழாவில் பழமையான கார்கள் அணிவகுப்பு; அமைச்சர் தொடங்கி வைத்தார்


குற்றாலம் சாரல் திருவிழாவில் பழமையான கார்கள் அணிவகுப்பு; அமைச்சர் தொடங்கி வைத்தார்
x

குற்றாலம் சாரல் திருவிழாவின் நிறைவு நாளான நேற்று பழைய கார்களின் கண்காட்சி மற்றும் அணிவகுப்பை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.

தென்காசி

குற்றாலம் சாரல் திருவிழாவின் நிறைவு நாளான நேற்று பழைய கார்களின் கண்காட்சி மற்றும் அணிவகுப்பை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.

சாரல் விழா

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சாரல் திருவிழா கடந்த 5-ந் தேதி தொடங்கியது. தினமும் குற்றாலத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க மலர் மற்றும் பழக்கண்காட்சி, நாய் கண்காட்சி, கோலப்போட்டி, கொழுகொழு குழந்தை போட்டி, ஆணழகன் போட்டி, படகுப்போட்டி, யோகா போட்டி ஆகியனவும், பல்வேறு கிராமிய கலைநிகழ்ச்சிகள், பரதநாட்டியம் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சிகளை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

கார்கள் அணிவகுப்பு

நிறைவு நாளான நேற்று குற்றாலத்தில் இருந்து பழைய குற்றாலம் செல்லும் திருப்பதியில் உள்ள ஜமீன் பங்களா வளாகத்தில் பழமையான கார்களின் கண்காட்சி நடைபெற்றது.

இதில், 1934-ம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட கார் உள்பட 33 கார்கள் இடம் பெற்றிருந்தன. அதனை தொடர்ந்து இவற்றின் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பினை சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட கலெக்டர் ஆகாஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த அணிவகுப்பு குற்றாலம் அண்ணா சிலை, காசிமேஜர்புரம், ராமாலயம் வழியாக வந்து மீண்டும் புறப்பட்ட இடத்தை அடைந்தது.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயினுலாப்தீன், வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த், மோட்டார் வாகன ஆய்வாளர் கண்ணன், தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், ஒன்றிய செயலாளர் அழகுசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story