சிலை கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ளவருக்கு முன்ஜாமீன் அளிக்க முடியாது- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
சிலை கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ளவருக்கு முன்ஜாமீன் அளிக்க முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அய்யானார்புரத்தில் அய்யனார் கோவில் உள்ளது. கடந்த 2015-ம் ஆண்டில் இந்த கோவிலில் இருந்த பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள், பூஜை ெபாருட்கள் உள்ளிட்டவை திருடப்பட்டன. இந்த சம்பவம் குறித்து மதுரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் இதே பகுதியைச் சேர்ந்த சிலர் சிலைகளை கடத்தியது தெரிந்தது. ஒரே ஒரு சிலையை மட்டும் போலீசார் மீட்டனர். இதுதொடர்பாக தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்த ஈஸ்வரன் உள்ளிட்ட சிலர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கில் அவர் தனக்கு முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது கூடுதல் அரசு குற்றவியல் வக்கீல் நம்பிசெல்வன் ஆஜராகி, திருட்டு போனதில் ஒரு சிலை மட்டுமே மீட்கப்பட்டு உள்ளது. இன்னும் 2 சிலைகள் எங்கு பதுக்கி வைக்கப்பட்டு உள்ளன? என போலீசார் விசாரித்து வருகின்றனர். தலைமறைவாக உள்ள மனுதாரரை காவலில் வைத்து போலீசார் விசாரித்தால்தான் அந்த சிலைகளை மீட்க முடியும். எனவே அவருக்கு முன்ஜாமீன் அளிக்கக்கூடாது என ஆட்சேபம் தெரிவித்தார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுதாரருக்கு முன்ஜாமீன் அளிக்க முடியாது எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்தார்.