தமிழர்களுக்கு எதிரான கட்சி தி.மு.க - அண்ணாமலை


தமிழர்களுக்கு எதிரான கட்சி தி.மு.க - அண்ணாமலை
x

தேனி மாவட்டத்தில் 3-வது நாளாக பாதயாத்திரை செய்த பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழர்களுக்கு எதிரான கட்சி தி.மு.க. என்று பரபரப்பாக பேசினார்.

அண்ணாமலை பாதயாத்திரை

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் பாதயாத்திரையை கடந்த ஜூலை மாதம் 28-ந்தேதி ராமேசுவரத்தில் தொடங்கினார். தேனி மாவட்டத்தில் தனது பாதயாத்திரையை கடந்த 7-ந்தேதி அண்ணாமலை தொடங்கினார். 3-வது நாளாக இன்று தேனி பொம்மையகவுண்டன்பட்டி சாலை பிள்ளையார் கோவில் அருகில் அவர் தனது பாதயாத்திரையை தொடங்கினார்.

அங்கிருந்து பெரியகுளம் சாலையில் அல்லிநகரம், நேரு சிலை, பழைய பஸ் நிலையம், மதுரை சாலை வழியாக பங்களாமேடு வரை சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நடந்து வந்தார். வரும் வழியில் பா.ஜ.க., இந்து முன்னணி, இந்து எழுச்சி முன்னணி நிர்வாகிகள் பல இடங்களில் அவருக்கு வரவேற்பு கொடுத்தனர். பொம்மையகவுண்டன்பட்டியில் ஜல்லிக்கட்டு காளைக்கு அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செய்தார். பெரியகுளம் சாலையில் அவருக்கு வெள்ளி சூலாயுதம் வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவின் வளர்ச்சி

பின்னர் பங்களாமேட்டில் அண்ணாமலை பேசியதாவது:-

தி.மு.க.வின் வளர்ச்சி என்பது அவர்களின் குடும்பத்தின் வளர்ச்சி. தி.மு.க. வளர்ந்தால் அவர்களின் குடும்பம் வளர்கிறது. 2024-ம் ஆண்டு தேர்தல் என்பது ஒரு சரித்திர தேர்தலாக இருக்கப் போகிறது. இந்தியா உலகத்தின் முதன்மை நாடாக மாறுவதற்கான தேர்தல். இதற்கு முன்பு எத்தனையோ பிரதமர்கள் வந்து இருக்கிறார்கள். அப்போது எல்லாம் இந்தியாவுக்கு உலக அரங்கில் இவ்வளவு பெரிய மரியாதை இல்லை. அப்போது எல்லாம் அமெரிக்கா, இங்கிலாந்து நாட்டிடம் கையேந்தி நின்றோம். இன்றைக்கு உலகத்திற்கு கொடுக்கக்கூடிய நாடாக இந்தியா மாறி இருக்கிறது.

டெல்லியில் ஜி20 மாநாடு நடந்து கொண்டு இருக்கிறது. உலகின் முக்கியப் புள்ளிகள் எல்லாம் வந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு தெரியும் வருகிற 20 ஆண்டுகள் என்பது இந்தியாவுக்கான ஆண்டுகள். இந்தியாவின் வளர்ச்சி என்பது உலகத்தின் வளர்ச்சி. அப்படிப்பட்ட வளர்ச்சியை பிரதமர் மோடி நமக்கு கொடுத்துக் கொண்டு இருக்கிறார். இந்த வளர்ச்சியில் தனி மனிதனும் வளர்ந்து இருக்கிறார், இந்தியாவும் வளர்ந்து இருக்கிறது.

தமிழர்களுக்கு எதிரான கட்சி

தி.மு.க. ஆட்சியை 29 மாதங்களாக பார்த்துக் கொண்டு இருக்கிறோம். தி.மு.க.வில் சாராய ஆலைகள் வளர்ந்து இருக்கிறது. டாஸ்மாக் வருமானம் வளர்ந்திருக்கிறது. ஏழைத்தாயின் கண்ணீர் அதிகரித்து வருகிறது. அரிவாள்வெட்டு கலாசாரம் அதிகரித்து உள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. காவல் துறையின் கையை கட்டிப் போட்டு விட்டார்கள்.

தமிழகத்தில் கஞ்சா கலாசாரம், டாஸ்மாக், வன்கொடுமை, வறுமை, சாதிய ஏற்றத்தாழ்வை ஒழிக்க வேண்டும். ஆனால், உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை ஒழிக்கப்போகிறேன் என்கிறார். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் யாரை ஒழிக்க வேண்டும் என்றால், தி.மு.க.வை ஒழிக்க வேண்டும்.

எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தி.மு.க. என்றால் தீய சக்தி என்றார்கள். தீய சக்திக்கு என்றைக்கும் தமிழ்நாட்டில் இடம் கொடுக்கக்கூடாது என்றார்கள். தி.மு.க. தமிழர்களுக்கு எதிரான கட்சி. நம்முடைய உரிமைகளை எல்லாம் விட்டுக்கொடுக்கக்கூடிய கட்சி.

அரசியல் அதிகாரம்

பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கும் பட்டியலின சமுதாயத்திற்கும் அரசியல் அதிகாரம் கொடுத்தால் தான் அந்த சமூகம் வேகமாக வளரும். மோடியின் மந்திரி சபையில் 79 அமைச்சர்களில், 20 பேர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டில் 35 அமைச்சர்களில் 3 பேர் மட்டுமே பட்டியலின, பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்தவர்கள். அதில் இருந்தே எந்த கட்சி பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன மக்களுக்கு ஆதரவாக இருக்கிறது என்று உங்களுக்கு தெரியும்.

ஆ.ராசா சனாதன தர்மம் என்று பேசுகிறார். மு.க.ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் ஆ.ராசாவை பொதுத்தொகுதியில் நிற்க வைக்க வேண்டும்.

சாதி கலவரம்

தி.மு.க. வந்த பிறகு 70 ஆண்டுகளில் தமிழகத்தில் சாதி வன்மம் அதிகமாகி இருக்கிறது. தென்தமிழகத்தில் சாதி கலவரம் அதிகமாகி இருக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் தி.மு.க. மட்டும் தான். மாஞ்சோலை படுகொலையில் 17 தேயிலை தொழிலாளர்கள் தாமிரபரணியில் குதித்து உயிரிழந்தார்கள். போலீஸ் துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கூக்குரலிட்டார்கள்.

அப்போது கருணாநிதி என்ன சொன்னார் என்றால், நடவடிக்கை எடுத்தால் ஒவ்வொரு போலீஸ் துறையும் ஒவ்வொரு சாதியை சார்ந்தவர்கள். அந்த சாதியினர் தன் மீது கோபித்துக் கொள்வார்கள் என்றார். போலீஸ் துறையில் சாதி எங்கிருந்து வந்தது. ஒரே ஒரு சாதி காக்கி சாதி, போலீஸ் துறையிலும் சாதியை கொண்டு வந்தது கருணாநிதி. நாடார் சமுதாயத்தை கன்னியாகுமரியில் முதன்முதலாக இந்து நாடார், கிறிஸ்தவ நாடார் என்று பேச ஆரம்பித்தது கருணாநிதி.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story