போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி


போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி
x

போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரத்தில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி காஞ்சீபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளை சேர்ந்த 3,500 மாணவ-மாணவிகள் இணைந்து மாபெரும் மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர், காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி. எழிலரசன் ஆகியோர் கலந்துகொண்டு விழிப்புணர்வு குறித்து முழக்கங்கள் எழுப்பி மனித சங்கிலி நிகழ்வை தொடங்கி வைத்தனர்.

3 கிலோமீட்டர் அளவில் மாணவ- மாணவிகள் கலந்து கொண்ட மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி காஞ்சீபுரம் தாலுகா அலுவலகத்தில் தொடங்கி நான்கு ராஜவீதிகள் வழியாக பஸ் நிலையத்தில் முடிவடைந்தது. மாணவ-மாணவிகள் போதைப்பொருளுக்கு எதிராக பதாகைகள் ஏந்தியும் விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியும் முழக்கமிட்டனர்.

இதன் தொடர்ச்சியாக போதை விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியை கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமையில் மாணவ-மாணவிகள் ஏற்றுக்கொண்டனர். பிறகு போதைப்பொருள் ஒழிப்பு சார்ந்த குறும்படம் ஒளிபரப்பப்பட்டது.

இதில் காஞ்சீபுரம் எம்.பி. க.செல்வம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

சோழிங்கநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் போதை பழக்கத்திற்கு எதிராக மாணவர்கள் உறுதிமொழி ஏற்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சோழிங்கநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ் உறுதிமொழியை வாசிக்க அதை பின் தொடர்ந்து பள்ளி மாணவ- மாணவிகளும் ஏற்றனர்.

பின்னர் நான் முதல்வன் என்ற உயர்கல்வி வேலை வாய்ப்பு புத்தகத்தை மாணவர்களுக்கு எம்.எல்.ஏ. வழங்கினார். இதில் தி.மு.க. மாமன்ற உறுப்பினர் சங்கர், தி.மு.க. வட்ட செயலாளர் எஸ்.ஆர்.உமாபதி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாபு, சோழிங்கநல்லூர் போக்குவரத்து உதவி ஆய்வாளர் கருணாநிதி உள்பட பலர் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்.

செங்கல்பட்டு அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் முன்னிலையில், செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் தலைமையில் போதைப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழியை மாணவ-மாணவிகள் ஏற்றுக்கொண்டனர்.

சென்னை ராஜீவ்காந்தி சாலை படூரில் உள்ள பேராசிரியர் தன்பாலன் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரியின் தலைவர் புகழேந்தி தனபாலன், இயக்குநர் ஸ்ரீதேவி புகழேந்தி, முதல்வர் பியூலா பத்மாவதி ஆகியோரின் முன்னிலையில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

தலைமை விருந்தினர். கானாத்தூர் காவல் உதவி ஆணையர் திரு. ரவிக்குமார் கலந்து கொண்டு போதைப் பொருட்களால் ஏற்படும் விளைவுகள் குறித்துச் சிறப்புரையாற்றி மாணவ மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.


Next Story