ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை


ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
x

வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வேலூர்

வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திட்ட இயக்குனர்

தர்மபுரி மாவட்டத்தில் வருவாய்த்துறையில் அலுவலராக பணியாற்றி வந்தவர் ஆனந்தமூர்த்தி. இவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தர்மபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றது. அது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனையொட்டி ஆனந்தமூர்த்திக்கு சொந்தமான மற்றும் தொடர்பான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

ஆனந்தமூர்த்தியின் மனைவி ஆர்த்தி வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

வேலூர் சத்துவாச்சாரி கோர்ட்டு அருகே அரசு பங்களாவில் ஆர்த்தி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த வீட்டிலும் சோதனை மேற்கொள்ள லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டனர்.

திடீர் சோதனை

அதன்படி நேற்று காலை சத்துவாச்சாரியில் உள்ள ஆர்த்தி வீட்டில் வேலூர் லஞ்சஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் மைதிலி தலைமையிலான போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். அப்போது வீட்டின் கதவுகளை பூட்டிவிட்டு வெளியே இருந்து யாரும் உள்ளே வராதபடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனை மாலை 5 மணி வரை நீடித்தது.

சோதனை முடிவில் சில ஆவணங்களை போலீசார் கைப்பற்றியதாக தெரிகிறது. அந்த ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தர்மபுரி, திருச்சி

இவர்களுக்கு சொந்தமான வீடு தர்மபுரி நார்தம்பட்டி கிராமத்தில் உள்ளது. அங்கும் திருச்சியில் ஆர்த்தியின் தந்தை ஓய்வுபெற்ற வங்கி மேலாளரான கலைமணி(75) என்பவர் வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.


Next Story