புளியரையில் லஞ்ச ஒழிப்பு சோதனை; பெண் அதிகாரி காரில் ரூ.2¾ லட்சம் சிக்கியது
புளியரையில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், மோட்டார் வாகன பெண் ஆய்வாளர் காரில் ரூ.2¾ லட்சம் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கோட்டை:
தமிழக-கேரள எல்லைப்பகுதியில் செங்கோட்டை அருகே உள்ள புளியரையில் வாகன சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடி வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் கேரளாவுக்கு சென்று வருகின்றன. அங்கு லஞ்சம் பெறப்படுவதாக தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு பால்சுதர் தலைமையில் துணை ஆய்வுக்குழு அலுவலர் கலைமதி, இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ மற்றும் போலீசார் சாதாரண உடையில் நேற்று காலையில் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் சோதனை சாவடி அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் பிரேமா ஞானகுமாரி (வயது 58) காலையில் தனது பணி முடிந்து கணவர் ஹாட்சனுடன் நெல்லை கிருஷ்ணாநகரில் உள்ள தனது வீட்டுக்கு காரில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். புளியரை அருகே உள்ள கற்குடி-தவணை விலக்கில் சென்றபோது, அவரது காரை லஞ்ச ஒழிப்பு போலீசார் தடுத்து நிறுத்தி அதிரடி சோதனை நடத்தினர். காரில் இருந்த பையை திறந்து பார்த்தபோது, அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. மொத்தம் ரூ.2 லட்சத்து 76 ஆயிரத்து 400 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்து, பிரேமா ஞானகுமாரியை மீண்டும் சோதனை சாவடிக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவரது காரில் கைப்பற்றப்பட்ட பணம் யாருடையது? அலுவலக பணமா? வாகன டிரைவர்களிடம் பெற்ற லஞ்ச பணமா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. புளியரை சோதனை சாவடி பெண் அதிகாரியின் காரில் ரூ.2¾ லட்சம் கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.