மின் இணைப்பை இடம் மாற்றம் செய்ய விவசாயியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை
மின் இணைப்பை இடம் மாற்றம் செய்ய விவசாயியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
செஞ்சி,
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பொண்ணங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் அரவிந்தன்(வயது 45), விவசாயி. இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் கிணறு அமைத்து மின் இணைப்பு பெற்று மின்மோட்டார் பொருத்தி இருந்தார். ஆனால் கிணற்றில் தண்ணீர் இல்லை. இதன்காரணமாக கிணற்றின் அருகே ஆழ்துளை கிணறு அமைத்து கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த மின் இணைப்பை ஆழ்துளை கிணற்றில் அமைக்கப்பட்டிருந்த மின்மோட்டாருக்கு மாற்ற சிட்டாம்பூண்டியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.
அப்போது அங்கிருந்த மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஜெகன் மோகன் என்பவர் மின் இணைப்பு மாற்றம் செய்ய அரவிந்தனிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
ரசாயனம் தடவிய பணம்
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அரவிந்தன், இதுகுறித்து விழுப்புரத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து போலீசார் கூறிய அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தை நேற்று மதியம் பணியில் இருந்த மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஜெகன்மோகனிடம் அரவிந்தன் கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்து இருந்த விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு பால்சுதர், இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் சக்கரபாணி உள்ளிட்ட போலீசார் ஜெகன் மோகனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
தொடர்ந்து அவரை விழுப்புரம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.