அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
அந்தியூர்
அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீரை ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. திறந்து விட்டார்.
வரட்டுப்பள்ளம் அணை
அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் வரட்டுப்பள்ளம் அணை அமைந்து உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 33.48 அடி ஆகும்.
இந்த அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு மற்றும் கெட்டிசமுத்திரம் ஏரி, அந்தியூர் பெரிய ஏரி, சந்தியபாளையம் ஏரி, வேம்பத்தி ஏரி, ஆப்பக்கூடல் ஆகிய ஏரிகளுக்கு திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
தண்ணீர் திறப்பு
இந்த நிலையில் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு 5-ந் தேதி தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மதகை திருகி தண்ணீரை திறந்துவிட்டார். அப்போது மதகுகள் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது. இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து சென்ற தண்ணீர் மீது பூக்களை தூவி வரவேற்றனர். நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 32.46 அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 21 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
100 நாட்கள்
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் சங்கராபாளையம், புதுமாரியம்மன், கோவில், பொய்யேரிக்கரை, கள்ளிமடைக்குட்டை, பாலக்குட்டை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்து 924 ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த தண்ணீரானது பருத்தி, நிலக்கடலை, மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு, எள் போன்ற பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்ய பயன் உள்ளதாக இருக்கும். இன்று (அதாவது நேற்று) முதல் வருகிற 12-6-2023 வரை 100 நாட்கள் தண்ணீர் திறக்கப்படுகிறது. மொத்தம் 108 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது,' என்றனர்.