தாசில்தார் வீட்டில் மேலும் ரூ.45¾ லட்சம் பறிமுதல்
ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்ட தாசில்தார் வீட்டில் இருந்து மேலும் ரூ.45¾ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. முக்கிய ஆவணங்களும் சிக்கின.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திபட்டியை சேர்ந்தவர் தென்னரசு. இவர் ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் தாசில்தாராக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் இவர் கருப்பையா என்பவரிடம் பட்டா மாறுதலுக்காக ரூ.1 லட்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று முன்தினம் தென்னரசுவை அவரது அலுவலகத்தில் கையும், களவுமாக கைது செய்தனர்.
இதையடுத்து ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமையில் அருப்புக்கோட்டை தாசில்தார் அறிவழகன் முன்னிலையில் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி உள்ளிட்ட போலீசார் நேற்று மாலை 6 மணிக்கு ஆத்திபட்டியில் உள்ள தாசில்தார் தென்னரசுவின் வீட்டிற்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் தென்னரசுவின் உறவினர் வீட்டில் இருந்த சாவியை வாங்கி தென்னரசுவின் வீட்டிற்குள் சென்றனர்.
பின்னர் அங்கு வீடு முழுவதும் சோதனை நடத்தினர். இரவு 9.30 மணிக்கு சோதனை நிறைவு பெற்றது. சோதனையில் ரூ.45 லட்சத்து 73 ஆயிரத்து 500 மற்றும் சில முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் சமீபத்தில் சொத்து விற்பனை செய்து அந்த பணத்தை வீட்டில் தென்னரசு வைத்திருந்ததாக அவரது உறவினர்கள் தரப்பில் கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் அதிகாரிகள் அந்த பணத்திற்கு உரிய ஆவணங்களை கோர்ட்டில் சமர்ப்பித்து பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளும்படி கூறி கொண்டு சென்றனர்.