மேலும் 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது
சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் மற்றும் சாதிய மோதல்கள் ஏற்படுத்துபவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நேற்று முன்தினம் கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் 6 பேரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் அருகே கடந்த பிப்ரவரி மாதம் சண்முகம் (வயது 32) என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் போலீசார் 8 பேரை கைது செய்தனர். இதில் 4 பேர் ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள காளையார்கோவிலை அடுத்த நந்தனூர் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் (28) என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் பரிந்துரை செய்தார் இதைத் தொடர்ந்து அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி உத்தரவிட்டார்.இதேபோல் கடந்த ஏப்ரல் மாதம் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உமர்பாரூக் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் தேவகோட்டையை அடுத்த சின்ன கொட்டகுடியைச் சேர்ந்த விமல் (21), மல்லகுளம் கிராமத்தைச் சேர்ந்த தர்மா (24), கைக்கூடிபட்டியைச் சேர்ந்த பிரபா என்ற பிரபாகரன் (26), நல்லான்குடியைச் சேர்ந்த செல்வக்குமார் (25) ஆகிய 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் பரிந்துரை செய்தார். தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க கலெக்டர் மதுசூதன் ரெட்டி உத்தரவிட்டார்.
மேலும் கடந்த ஜனவரி மாதம் திருப்புவனத்தில் பாலாஜி என்பவரை கொலை செய்து அவர் உடலை பாதி எரிந்த நிலையில் போட்டுவிட்டு சென்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய கண்ணன் (20) என்பவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் மதுசூதன் ரெட்டி உத்தரவிட்டார்.