புதுமண்டபத்தில் மீனாட்சி அம்மனுக்கு தைலக்காப்பு
மதுரை மீனாட்சி அம்மனுக்கு புதுமண்டபத்தில் தைலக்காப்பு நடந்தது
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மார்கழி மாத தைல காப்பு உற்சவம் நேற்று தொடங்கியது. அடுத்த மாதம் 5-ந் தேதி வரை இந்த விழா நடக்கிறது. இதையொட்டி நேற்று மாலை மீனாட்சி அம்மன், கோவிலில் இருந்து புறப்பட்டு புதுமண்டபத்தில் எழுந்தருளினார்.
அம்மனுக்கு தைலம் சாத்துதல், பல் துலக்குதல், வெற்றிலை பாக்கு சாப்பிடுதல், கண்ணாடி பார்த்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளினார். புதுமண்டபத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். தொடர்ந்து, 4 சித்திரை வீதிகளிலும் மீனாட்சி அம்மன் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
விழாவில் ஜனவரி 4-ந் தேதி கோ ரதத்திலும், 5-ந் தேதி கனக தண்டியல் அலங்காரத்திலும் மீனாட்சி அம்மன் எழுந்தருளி சித்திரை வீதிகளை வலம் வருவார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.