ஆனி திருமஞ்சன விழாவில் சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் 'சிவாய நம' பக்தி கோஷத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்


ஆனி திருமஞ்சன விழாவில்  சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம்  சிவாய நம பக்தி கோஷத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்
x

ஆனி திருமஞ்சன விழாவில் சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சிவாய நம என்கிற பக்தி கோஷத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

கடலூர்


சிதம்பரம்,

பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலத்திற்கு பெயர் பெற்ற இடமாக உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் விளங்குகிறது. பல்வேறு சிறப்புகள் மிக்க இந்த கோவிலில் ஆனந்த நடராஜமூர்த்திக்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை, ஆவணி, புரட்டாசி, மாசி, மார்கழி, ஆனி ஆகிய மாதங்களில் மகா அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம்.

இதில் சித்திரை, ஆவணி, புரட்டாசி, மாசி ஆகிய மாதங்களில் சித்சபையிலும், மார்கழி, ஆனி ஆகிய மாதங்களில் ராஜசபையிலும் ஆனந்த நடராஜருக்கு மகா அபிஷேகங்கள் நடைபெறும்.

மூலவரே உற்சவராக...

ஆனி, மார்கழி மாதம் நடைபெறும் மகா அபிஷேகம் சிறப்பு வாய்ந்தவையாகும். ஏனெனில், இந்த 2 உற்சவத்தின் போதும், மூலவராகிய ஆனந்த நடராஜமூர்த்தியே, சிவகாம சுந்தரி அம்பாளுடன் உற்சவராக தேரில் எழுந்தருளி வலம் வருவார். மறுநாள் ஆயிரங்கால் மண்டபம் என்னும் ராஜசபையில் மூலவர் ஆனந்த நடராஜர், அம்பாளுடன் எழுந்தருள்வார். அங்கு அவருக்கு மகா அபிஷேகம் நடைபெறும்.

அதன்படி, இந்தாண்டு ஆனி திருமஞ்சன விழா கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நேற்று காலை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

ரகசிய பூஜை

இதையொட்டி, அதிகாலையில் மூலவருக்கு ரகசிய பூஜை நடந்தது. பின்னர் சிவகாமசுந்தரி சமேத ஆனந்தநடராஜருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து, அதிகாலை 6 மணிக்கு மூலவராகிய ஆனந்தநடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் ஆகியோர் சித்சபையில் இருந்து கனக சபைக்கு எழுந்தருளினர்.

தேரோட்டம்

பின்னர், கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்து, கீழ வீதியில் உள்ள தேர் மண்டபத்துக்கு சுவாமி வந்தடைந்தார். அங்கு பச்சையப்பன் அறக்கட்டளை சார்பில் பொது தீட்சிதர்கள் முன்னிலையில் மண்டகபடி பூஜை நடைபெற்றது.

பின்னர், காலை 7.15 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. அதை தொடர்ந்து விநாயகர், சுப்பிரமணியர், நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேரில் எழுந்தருளினர்.

முதலில் விநாயகர் தேரும், அதை தொடர்ந்து சுப்பிரமணியர் தேரையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். காலை 8.30 மணிக்கு மூலவர் நடராஜர் தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.

அப்போது, பக்தர்கள் ஓம் நமச்சிவாய, சிவாய நம என்ற பக்தி கோஷங்களை எழுப்பியவாறு தேரை இழுத்து வந்தனர். தேரோடும் வீதிகளில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்தாடிவந்தது, பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

காலை 9 மணிக்கு சிவகாமசுந்தரி மற்றும் சண்டிகேஸ்வரர் தேரையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளிலும் தேர் வலம் வந்து, இரவு 8 மணியளவில் நிலையை வந்தடைந்தது.

இன்று ஆனி திருமஞ்சனம்

பின்னர், ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் சாமி எழுந்தருளினார். அங்கு லட்சார்ச்சனை நடைபெற்றது. ஆனி திருமஞ்சன மகா தரிசன நாளான இன்று (புதன்கிழமை) அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை ஆயிரங்கால் மண்டபத்தில் மூலவர் ஆனந்தநடராஜருக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர், காலை 10 மணிக்கு ரகசிய பூஜை நடக்கிறது.

இதையடுத்து, திருஆபரண அலங்காரமும், பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடக்கிறது. மதியம் 2 மணிக்கு மேல் ஆனி திருமஞ்சன தரிசன நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

நாளை (வியாழக்கிழமை) பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதிஉலா வரும் நிகழ்ச்சியோடு, ஆனி திருமஞ்சன விழா நிறைவுபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

முன்னதாக நேற்று தேரோட்டத்தின் போது, சிவனடியார்கள் சிவதாண்டவம் ஆடியபடி சென்றனர். மேலும் பெண்கள் தேரோடும் வீதிகளில் வண்ண கோலமிட்டு தேரை வரவேற்றனர்.

தேரோட்டத்தை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேஷ் தலைமையில் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ராஜ் உள்பட 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பக்தர்கள் தரிசனத்துக்கு சிறப்பு ஏற்பாடு

சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று(புதன்கிழமை) ஆனிதிருமஞ்சன தரிசன விழா நடைபெற உள்ளது. இதில பங்கேற்க வரும் பக்தர்கள், நெரிசலில் சிக்காமல் எளிதில் சாமிதரிசனம் செய்து வருவதற்கு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதன்படி, கோவிலுக்குள் செல்லும் பக்தர்கள் வடக்கு மற்றும் மேற்கு கோபுர வாயில் வழியாக அனுமதிக்கப்பட இருக்கிறார்கள்.

மேலும், தரிசனம் முடிந்த பின்னர் கிழக்கு மற்றும் தெற்கு கோபுர வாயில் வழியாக பக்தர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அதோடு, கோவிலுக்குள் அன்னதானம் வழங்க அனுமதி இல்லை. மாறாக 4 வீதிகளில் மட்டும் அன்னதானம் வழங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.மேற்கண்ட தகவலை சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்ராஜ் தெரிவித்தார்.


Next Story