அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் காலத்திற்கேற்ப புதிய படிப்புகளை தொடங்க வேண்டும்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் காலத்திற்கேற்ப புதிய படிப்புகளை தொடங்க வேண்டும் என சங்கங்களின் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீ்ர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அண்ணாமலை நகர்,
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக சங்கங்களின் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு கூட்டமைப்பு தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர்கள் ரொனால்டுராஸ், துரை ராமசாமி, குமரவேல், சதீஷ்குமார், வசந்தராமன், இளவரசன், ஜெயகண்ணன், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காலத்திற்கேற்ப புதிய படிப்புகளை தொடங்க வேண்டும். பேராசிரியர், ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பதவி உயர்வுகளை உடனே வழங்க வேண்டும். தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி ஊழியர்களை உடனடியாக பணிவரன்முறை செய்ய வேண்டும்.
ஓய்வூதிய பலன்கள்
ஓய்வு பெற்ற பேராசிரியர்கள், ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். பணிக்காலத்தில் மரணமடைந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு உடனடியாக கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் செயற்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார். இதனை தொடர்ந்து ஆசிரியர், ஊழியர், ஓய்வூதியர்களின் கோரிக்கைகள் அடங்கிய மனு துணைவேந்தரின் நேர்முக செயலாளர் பாக்யராஜிடம் அளிக்கப்பட்டது.