அண்ணாமலை பல்கலைக்கழக ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பினர் வாயில் முழக்க போராட்டம்
அண்ணாமலை பல்கலைக்கழக ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பினர் வாயில் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அண்ணாமலைநகர்,
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர், ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை பொறியியல் புல வளாகத்தில் வாயில் முழக்க போராட்டம் நடந்தது. இதற்கு கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் சிவகுருநாதன் தலைமை தாங்கினார். இதில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் தொகுப்பூதியர் மற்றும் தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், 10 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ள பதவி உயர்வுகளை உடனடியாக அளிக்க வேண்டும், ஆசிரியர்களுக்கான காலமுறை பதவி உயர்வுகளை வழங்கிட வேண்டும், ஆசிரியர், ஊழியர்களுக்கு 7-வது ஊதிய கமிஷன் நிலுவைத் தொகைகளை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. இதில்அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் பாஸ்கரன், ஆசிரியர் நல சங்க தலைவர் சுப்பிரமணியன், ஊழியர் சங்க தலைவர் மனோகரன், ஊழியர் சங்க முன்னாள் பொதுச் செயலாளர் ரவி, பேராசிரியர் அசோகன் உள்பட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். முடிவில் ஊழியர் சங்க பொது செயலாளர் பழனிவேல் நன்றி கூறினார்.