கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்


கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்
x

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் நேற்று அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி 2,500 கிலோ பச்சரிசியால் சமைக்கப்பட்ட சாதம் சிவலிங்கத்துக்கு சாத்தப்பட்டது.

அரியலூர்

உலக புராதான சின்னம்

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழனால் இந்த கோவில் கலைநயத்துடன் பிரமாண்டமாக கட்டப்பட்டது. போர் கைதிகள் மற்றும் வீரர்களை கொண்டு 4½ ஏக்கர் பரப்பளவில் தற்கால பொறியியல் வல்லுனர்களுக்கு சவால்விடும் வகையில் இந்த கோவில் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த கோவில் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த கோவிலில் இந்து சமய அறநிலைய துறையினர் பூஜைகள் செய்து நிர்வகித்து வருகின்றனர். உலக புராதான சின்னங்கள் அடங்கிய பட்டியலை வெளியிடும் யுனஸ்கோ அமைப்பினர் இந்த கோவிலை புராதான சின்னமாக அறிவித்து உலக சுற்றுலா வரைபடத்தில் இடம்பெற செய்து பெருமைபடுத்தியுள்ளனர்.

அன்னாபிஷேகம்

மேலும் இக்கோவிலில் நிறுவப்பட்டுள்ள சிவலிங்கம் 60 அடி சுற்றளவும், 13½ அடி உயரமும் கொண்டு பிரம்மாண்டமாக காணப்படுகிறது. ஒரே கல்லால் செதுக்கப்பட்டுள்ளது என்ற சிறப்பும் உண்டு. இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத பவுர்ணமி அன்று வரலாற்று சிறப்புமிக்க இக்கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இதனை காஞ்சி சங்கரமட நிர்வாகிகள் கடந்த 37 ஆண்டுகளாக செய்து வந்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக அன்னக்காப்பு அலங்காரம் அபிஷேகம் மட்டுமே செய்யப்பட்டது.

இந்நிலையில் 38-வது ஆண்டாக நேற்று ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு இந்த கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை 100 மூட்டைகளில் இருந்த 2,500 கிலோ பச்சரிசியை 6 நீராவி அடுப்புகளில் சமைத்தனர். பின்னர் மாலை 5 மணி வரை அன்னாபிஷேக பணிகள் நடந்தன. இதில் சமைக்கப்பட்ட சாதத்தை நூற்றுக்கணக்கான சிவாச்சாரியார்கள் மூங்கில் கூடைகளில் சுமந்து சென்று சிவலிங்கத்தின் மீது சாத்தி அன்னாபிஷேகம் செய்தனர். பின்னர் சிவலிங்கத்தின் மீது காய்கறிகள், பழங்கள், பலகாரங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு, பிரமாண்ட மாலை அணிவிக்கப்பட்டது.

நீண்ட வரிசையில் நின்று தரிசனம்

இதைத்தொடர்ந்து மாலை 6.30 மணியளவில் ஐந்து முக மகாதீபாராதனை நடந்தது. லிங்கத்தின் மீது சாத்தப்படும் ஒவ்வொரு சாதமும் லிங்கத்தின் தன்மையை பெறுவது என்றும், ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பதும் ஐதீகம்.

இந்த அன்னாபிஷேக நிகழ்ச்சியில் திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன், உடையார்பாளையம் கோட்டாட்சியர் பரிமளம், தாசில்தார் துரை, உதவி ஆணையர் நாகராஜ், செயல் அலுவலர் செந்தமிழ்செல்வி மற்றும் தொல்லியல் துறை அலுவலர்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் இரவில் சிவலிங்கத்தின் மீது சாத்தப்பட்ட சாதம் இரவு 8 மணியளவில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த சாதத்தை சாப்பிடுவதால் நோய்கள் குணமாகும், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பக்தர்களுக்கு வழங்கப்பட்ட சாதம் போக மீதமுள்ள சாதம் அருகில் உள்ள ஜீவராசிகளுக்கும் மற்றும் குளங்களில் உள்ள மீன்களுக்கும் உணவாக அளிக்கப்பட்டது. விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைக்கதிரவன், இன்ஸ்பெக்டர் பெரியசாமி ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story