விஸ்வநாதர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்
விஸ்வநாதர் கோவிலில் ஆனி திருமஞ்சனம் நடந்தது.
தா.பழூர்:
கோவில்களில் வழக்கமாக நடராஜப்பெருமானுக்கு ஒவ்வொரு ஆண்டும் 6 நாட்கள் மட்டும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறுவது வழக்கம். அதிலும் ஆனி மாதம் நடைபெறும் ஆனித் திருமஞ்சனம் மற்றும் மார்கழி மாதம் நடைபெறும் ஆருத்ரா தரிசனம் ஆகிய நாட்களில் நடைபெறும் அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதன்படி அரியலூர் மாவட்டம், தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
இதில் விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், நடராஜர் மற்றும் சிவகாமி அம்மனுக்கு பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் நடராஜ பெருமான், சிவகாமி அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதைத்தொடர்ந்து நடராஜ பெருமான், சிவகாமி அம்மன் அலங்கரிக்கப்பட்டு திருமுறைகள், சிவபுராணம், நடராஜப் பத்து முழங்க ஷோடச உபச்சாரங்கள் செய்யப்பட்டன. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆனித்திருமஞ்சன வழிபாட்டு குழுவினர் ஏற்பாடு செய்தனர். இதைத்தொடர்ந்து நேற்று நடராஜ பெருமான், சிவகாமி தாயார் புதிதாக செய்யப்பட்ட மஞ்சத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு வீதி உலா நடைபெற்றது. ராஜ வீதிகளில் பவனி வந்த நடராஜ பெருமான், சிவகாமி தாயாருக்கு வீடுகள் தோறும் பக்தர்கள் தீபாராதனை செய்தனர். மீண்டும் கோவிலுக்கு திரும்பிய நடராஜ பெருமானுக்கும், சிவகாமி தாயாருக்கும் மங்கல இசை ஆராதனை நடைபெற்றது. பின்னர் விடையாற்றி உற்சவத்துக்கு பிறகு மகா தீபாராதனை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.