அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி:
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் திருத்துறைப்பூண்டி வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் கமலா தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் பிரேமா, மாவட்ட தலைவர் தவமணி, வட்டார செயலாளர் பாமா, மாவட்ட இணைச் செயலாளர் சாரதாம்பாள், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி ஆகியோர் பேசினர். கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும் தொகையை பில்லில் உள்ளவாறு முழுமையாக வழங்க வேண்டும், அங்கன்வாடி மையங்களுக்கும் மின் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும்,காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். குழந்தைகள் நலன் கருதி வெயிலின் தாக்கத்தையும் தற்போது பரவி வரும் காய்ச்சலையும் கருத்தில் கொண்டு கோடை விடுமுறை விட வேண்டும். 10 ஆண்டுகள் பணி முடித்த தகுதி வாய்ந்த உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். எடை கருவிகள் பழுதடைந்து விட்டதால் புதிய கருவிகள் வாங்க வேண்டும்.பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் 100-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.