தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
காத்திருக்கும் போராட்டம்
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலையில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் ஜெபராணி தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் டி.டெய்சி முன்னிலை வகித்தார். போராட்டத்தில் ஆய்வு என்ற பெயரில் பணம் வேண்டும், இல்லையென்றால் வேறு இடத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்படுவீர்கள் என்று மிரட்டிய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அங்கன்வாடி ஊழியர்களுக்கு போடப்பட்ட கட்டாய இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
கலந்து கொண்டவர்கள்
போராட்டத்தில் சி.ஐ.டி.யு மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, அங்கன்வாடி ஊழியர் உதவியாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சந்திரா, மாவட்ட பொருளாளர்ஜெயலட்சுமி, சி.ஐ.டி.யு மாவட்ட துணைத்தலைவர் முனியசாமி, மாவட்ட குழு உறுப்பினர் ராமமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி புறநகர செயலாளர் ராஜா மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.