அங்கன்வாடி ஊழியர்கள்-உதவியாளர்கள் விளக்க கூட்டம்


அங்கன்வாடி ஊழியர்கள்-உதவியாளர்கள் விளக்க கூட்டம்
x

கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள்-உதவியாளர்கள் விளக்க கூட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் கோரிக்கை விளக்க கூட்டம் நேற்று மாலை நடந்தது. பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் மேனகா தலைமை தாங்கினார். செயலாளர் தமிழரசி முன்னிலை வகித்தார். சங்கத்தின் மாநில துணைத் தலைவர் மணிமேகலை கோரிக்கைகளை விளக்கி பேசுகையில், மதுரை மாவட்டம் திட்டம் 2-ல் சிம்மக்கல் அங்கன்வாடி ஊழியர் அம்சவல்லி கூடுதல் பணிச்சுமையாலும், அதிகாரிகளின் கடுஞ்சொற்களால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். அதேபோல் நாம் யாரும் செய்து கொள்ளக்கூடாது. எந்த பிரச்சினையாக இருந்தாலும் எதிர்த்து நிற்க வேண்டும். நம்மால் எதையும் சாதிக்க முடியும். ஆகவே தவறான முடிவை யாரும் எடுக்க வேண்டாம், என்றார். கூட்டத்தில் கலந்து கொண்ட அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அனைத்து பதிவேடுகளையும் அரசே வழங்க வேண்டும். பிறதுறை பணிகளை செய்ய கூறி வற்புறுத்தக்கூடாது. செயல்படாத செல்போன்களை திரும்ப பெற வேண்டும். அலுவலர்கள் மூலம் ஊழியர்களை மிரட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முடிவில் இறந்து போன அங்கன்வாடி ஊழியர் அம்சவல்லிக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.


Next Story