அங்காளம்மன் கோவில் தேரோட்டம்
சாமிப்பேட்டை அங்காளம்மன் கோவில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் தாலுகா ஆனாங்கூர் மதுரா சாமிப்பேட்டை கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிப்பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
அதுபோல் இந்த ஆண்டுக்கான மாசிப்பெருவிழா கடந்த 18-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், இரவில் சாமி வீதி உலாவும் நடைபெற்றது.
தேரோட்டம்
விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் மாலை தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர் இந்த தேரை ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்துச்சென்றனர். தேர், சாமிப்பேட்டை கிராம 4 மாட வீதிகளின் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது.
அதன் பின்னர் அங்காளம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடந்தது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் சாமிப்பேட்டை, ஆனாங்கூர், வேட்டப்பூர், சின்னப்பேட்டை ஆகிய கிராம மக்கள் செய்திருந்தனர்.