ஆண்டிப்பட்டியில் ரூ.3.50 கோடியில் கட்டப்படும் சந்தை
ஆண்டிப்பட்டியில் ரூ.3.50 கோடி மதிப்பில் கட்டப்படும் சந்தையை தமிழ்நாடு பேரூராட்சிகள் இணை இயக்குனர் ஆய்வு செய்தார்
தமிழ்நாடு பேரூராட்சிகளின் இணை இயக்குனர் மலைமான் திருமுடிக்காரி ஆண்டிப்பட்டி நகரில் சுமார் ரூ.3.50 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் காய்கறி சந்தையை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து அங்கு கட்டப்பட்டு வரும் 256 கடைகள், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.
பின்னர் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பைகளை தரம் பிரித்து உரமாக்கும் இடம், விண்ட்ரோ முறையில் உரம் தயாரிக்கப்படும் முறை, குப்பைகளை தரம் பிரித்து வைக்கும் பகுதி, டீ தூள் குப்பை, பழங்கள் குப்பைகள் வைக்கப்பட்டிருக்கும் பகுதி, மண்புழு உரம் தயாரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் பகுதி உள்ளிட்ட இ்டங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வுக்கு பின் பேரூராட்சி அதிகாரிகளிடம் சந்தை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தூய்மை பாரத இயக்கத்தின் மூலம் உரம் தயாரிக்கும் முறைகள் குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ராஜாராம், பேரூராட்சி தலைவர் சந்திரகலா, செயல் அலுவலர் சின்னச்சாமி பாண்டியன், சுகாதார ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.