வெயிலின் தாக்கத்தை குறைக்கும் ஆந்திர மாநில தேங்காய் பூ
வெயிலின் தாக்கத்தை குறைக்கும் ஆந்திர மாநில தேங்காய் பூ
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டி உள்ளது. இதன்காரணமாக பதனீர், நுங்கு, இளநீர், தர்ப்பூசணி, சர்பத் உள்ளிட்டவற்றை மக்கள் தேடி சென்று வாங்கி பருகி வருகின்றனர். தற்போது அதிக அளவில் தேங்காய் பூ விற்பனை அதிகரித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தேங்காய் பூ விற்பனை நடந்து வருகிறது. இந்த தேங்காய் பூக்களை பார்வைக்கு வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து, தேங்காய் பூ வியாபாரி அண்ணாத்துரை கூறியதாவது:- ஆந்திராவில் இருந்து இந்த தேங்காய் பூக்களை வாங்கி வந்து விற்பனை செய்து வருகிறோம். இந்த தேங்காய் பூ 3 மாத பயிராக பதியம் முறையில் விளைவிக்கப்படுகிறது. 3 மாதங்களுக்குள் எடுத்துவிட வேண்டும். இல்லாவிட்டால் பூ முற்றி மரமாக வளர துவங்கி விடும். 1 தேங்காயில் 150 முதல் 200 கிராம் வரை பூ இருக்கும். இந்த பூவை நாங்கள் ரூ.70 முதல் 90 வரை விற்பனை செய்து வருகிறோம்.
இந்த தேங்காய் பூவை உண்பதால், வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாவதோடு உடலுக்கு குளிர்ச்சி கிடைக்கிறது. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்குவதாக கூறப்படுகிறது. கோடை வெயிலின் தாக்கத்தை இந்த தேங்காய் பூ குறைக்கும் தன்மை உடையது. நல்ல சுவையாக இருப்பதாலும் மருத்துவ குணமுள்ள உணவுப்பொருள் என்பதாலும் பலரும் இதை விரும்பி வாங்குகின்றனர். இதனால் ஆந்திராவில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்கிறோம். இவ்வாறு கூறினார்.