மாமல்லபுரத்தில் 15-ந்தேதி முதல் புராதன சின்னங்களை மின்விளக்கு வெளிச்சத்தில் கண்டுகளிக்கலாம் - தொல்லியல் துறை


மாமல்லபுரத்தில் 15-ந்தேதி முதல் புராதன சின்னங்களை மின்விளக்கு வெளிச்சத்தில் கண்டுகளிக்கலாம் - தொல்லியல் துறை
x

மாமல்லபுரத்தில் 15-ந்தேதி முதல் புராதன சின்னங்களை மின்விளக்கு வெளிச்சத்தில் கண்டுகளிக்கலாம் என்று தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு

புராதன சின்னங்கள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் நகரம் சர்வதேச சுற்றுலா தலமாக திகழ்கிறது. இங்குள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்கள் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய நினைவு சின்னமாக திகழ்கிறது. இந்த பாரம்பரிய நினைவு சின்னங்களை கண்டுகளிக்க நாள்தோறும் ஏராளமான உளநாட்டு, வெளிநாட்டு பயணிகள் மாமல்லபுரம் வந்து செல்கின்றனர். இங்குள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம், அர்ஜுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்களை காண காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

மின்விளக்கு வெளிச்சத்தில்

இந்திய தொல்லியல் துறை பராமரிப்பில் இருக்கும் இந்த புராதன சின்னங்களில் பிரதமர் நரேந்திரமோடி - சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் கடந்த 2019-ம் ஆண்டு சந்தித்தபோது சிற்பங்களின் பாரம்பரிய தன்மை பாதிக்காத வகையில் ஔி உமிழ்வு குறைவான ஜொலிக்கும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டன. அப்போது மின்னொளியில் ஜொலித்த சிற்பங்களை காண பார்வையாளர் நேரம் நீட்டிக்கப்பட்டு, இரவு 9 மணி வரை சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். நாளடைவில் மாமல்லபுரத்தில் மழைநீர் சூழ்ந்ததால் மின் விளக்குகள் பழுதடைந்தன.

கொரோனா கால தடைக்கு பின் மீண்டும் இரவில் பயணிகள் அனுமதிக்க முடிவெடுத்த தொல்லியல் துறை நிர்வாகம் கடந்த ஆண்டு மழைநீரால் பாதிக்கப்படாதவாறு தரைமட்டத்திற்கு மேலே மின் விளக்குகளை அமைத்தது. ஆனால் அவை பயன்படுத்தப்படாமல் மீண்டும் பழுதடைந்ததால் புதிய மின்விளக்குகள் பொருத்தப்பட்டு, இரவில் சிற்பங்கள் ஒளிர்ந்தன. ஆனால் சுற்றுலா பயணிகள் இரவு நேரத்தில் மின் விளக்கு வெளிச்சத்தில் புராதன சின்னங்களை காண அனுமதிக்கப்படவில்லை.

15-ந்தேதி முதல்

இந்த நிலையில் மாமல்லபுரம் கடற்கரை கோவில், ஐந்து ரதம், அர்ஜுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்களை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்வையிட்டு கண்டுகளிக்க மத்திய தொல்லியல் துறை தற்போது அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து வருகிற 15-ந்தேதி் (சனிக்கிழமை) முதல் இரவு 9 மணி வரை மின் விளக்கு வெளிச்சத்தில் மாமல்லபுரம் புராதன சின்னங்களை கண்டுகளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று மாமல்லபுரம் தொல்லியல் துறை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.


Next Story