விக்கிரவாண்டியில் சிறைச்சாலைபோல் இயங்கிய ஆசிரமம்:மனநலம் பாதிக்கப்பட்டவர்களை வெளிமாநில ஆசிரமத்துக்கு அனுப்பி நிதி குவித்தனர்போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்
விக்கிரவாண்டி ஆசிரமம் சிறைச்சாலைபோல் இயங்கியுள்ளது. அங்குள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களை வெளிமாநிலங்களில் உள்ள ஆசிரமத்துக்கு அனுப்பி வைத்து நிதி குவித்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
விக்கிரவாண்டி அன்புஜோதி ஆசிரமம் பற்றி ஒவ்வொரு நாளும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது போலீசார் நடத்திய விசாரணையில் வெளியான தகவல்கள் விவரம் வருமாறு:-
கொட்டகை முதல் அடுக்குமாடி வரை
கேரளா மாநிலத்தை சேர்ந்த ஜூபின்பேபி, கடந்த 2003-ல் விழுப்புரத்தில் குடியேறினார். அவர் ஆரம்பத்தில் வீடு, வீடாக சென்று ஆதரவற்றோர்களுக்கு உதவி செய்வதாக கூறி நன்கொடை மற்றும் பழைய துணிகள், உணவு வாங்கி வந்துள்ளார். அதுபோல் பஸ் நிலையம், ரெயில் நிலையம் மற்றும் சாலையோரங்கள், கடைவீதிகளில் அனாதையாகவும், ஆதரவின்றியும் சுற்றித்திரிபவர்களுக்கு உடுத்த உடை, உண்ண உணவு ஆகியவற்றை வழங்கி அவர்களின் அன்பை பெற்றுள்ளார்.
பின்னர் குண்டலப்புலியூரில் 2005-ல் அறக்கட்டளை என்று பதிவு செய்து அனுமதி பெற்று ஒரு சிறிய கட்டிடத்தில் கொட்டகைப்போன்று ஆசிரமம் நடத்தியுள்ளார். அதில் நெருங்கிய நண்பர்களின் வட்டாரம் மூலம் படிப்படியாக மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர்களை அந்த அறக்கட்டளையில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டார். அதுமட்டுமின்றி சாலையோரங்களில் சுற்றித்திரிபவர்களையும் கண்டறிந்து அவர்களை மீட்டு வந்து தனது அறக்கட்டளையில் சேர்த்து தங்க வைத்துள்ளார். போலீசாரும், தங்கள் பங்கிற்கு சாலையோரம் சுற்றித்திரிபவர்களை மீட்டு அங்கு சேர்த்துள்ளனர். அப்போதுகூட இந்த ஆசிரமம் முறையான அனுமதி பெற்று இயங்குகிறதா என்று போலீசார் கண்காணிக்க தவறிவிட்டனர். இதன் விளைவு ஆரம்பத்தில் சிறிய கட்டிடத்தில் இருந்த இந்த அறக்கட்டளை நாளுக்குநாள் வளர்ச்சியடைந்து ஆசிரமமாக உருவெடுத்து 3 மாடி கட்டிடங்களாக மாறியுள்ளது.
வியாபார நோக்கம்
பல ஆண்டுகளாக ஆசிரமம் அனுமதி பெறாமல் இயங்கி வந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அந்த ஆசிரமத்தினர் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அதாவது போதை மறுவாழ்வு மையம் நடத்துகிறோம் என்றுகூறி விண்ணப்பம் செய்துள்ளனர். ஆனால் அங்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்களும், ஆதரவற்றவர்களும் இருந்த நிலையில் போதை மறுவாழ்வுக்கான மையம் என்று எப்படி அனுமதி வழங்குவது என்று அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஆசிரமத்தை செயல்படுத்தி வந்துள்ளனர்.
ஆசிரமம் மென்மேலும் வளர்ச்சி காணவும், பொருளாதார ரீதியாக நிதி குவியவும் ஜூபின்பேபி முடிவு செய்தார். இதற்காக அவர் அவ்வப்போது, தனது ஆசிரமத்தில் இருப்பவர்களை இடப்பற்றாக்குறை, உயர் மருத்துவ சிகிச்சை என்று ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி வாகனம் மூலம் பெங்களூரு, ராஜஸ்தான், புதுச்சேரி போன்ற பல்வேறு வெளிமாநிலங்களில் உள்ள ஆசிரமத்திற்கு வியாபார நோக்கத்திற்காக அனுப்பி வைத்துள்ளார்.
வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைப்பு
அதாவது அந்த ஆசிரமங்களுக்கு அனுப்பும்போது ஒரு நபருக்கு ஒரு குறிப்பிட்ட தொகை என்ற வீதத்தில் கமிஷன் வாங்கிக்கொண்டு வெவ்வேறு ஆசிரமத்திற்கு அனுப்பியுள்ளார். இவர்கள் மூலம் அந்த ஆசிரமத்தினர், தங்கள் ஆசிரமத்தில் இவ்வளவு எண்ணிக்கையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோர்களை தங்க வைத்து பராமரித்து வருகிறோம் என்று கணக்கு காண்பித்து வெளிநாட்டில் இருந்து நிதியை பெற்று குவித்துள்ளனர். அந்த நிதியின் மூலமும் ஜூபின்பேபிக்கு ஒரு குறிப்பிட்ட தொகை கமிஷன் கிடைத்துள்ளது.
இதேபோல் பிற மாநிலங்களில் உள்ள ஆசிரமத்தில் இருப்பவர்களையும் ஜூபின்பேபி குண்டலப்புலியூர் ஆசிரமத்திற்கு அழைத்துவந்து கணக்கு காண்பித்து அதன் மூலம் தனது ஆசிரமத்திற்கு நிதி குவியவும் வழி செய்துள்ளார்.
சிறைச்சாலைபோல்....
இதுபோன்று பொருளாதார ரீதியாக மேன்மையடையும் குறிக்கோளுடனே ஆசிரம நிர்வாகத்தினர் இருந்துள்ளனரே தவிர ஆசிரமத்தில் தங்கியுள்ளவர்களுக்கு எந்தவொரு அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கவில்லை. 3 தளங்கள் கொண்ட ஆசிரமத்தில் தரைத்தளத்தில் அலுவலகம், ஊழியர்கள் தங்கும் அறையும், முதல் மற்றும் 2-ம் தளங்களில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோர் ஆகியோரை சிறைக்கைதிகள்போல் அறைகளில் அடைத்து வைத்துள்ளனர். அந்த ஆசிரமத்தில் இருக்கும் அறைகளை பார்த்தால் சிறைச்சாலைகளில் குற்றவாளிகளை அடைப்பதற்கான அறைகள்போன்றே இருந்துள்ளது. அந்த அறைகளில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அடைத்து அவர்கள் வெளியில் எங்கும் செல்லாமல் இருக்க அறையை பூட்டி வைத்து சித்ரவதை செய்துள்ளனர்.
இரும்பு சங்கிலியால் கட்டினர்
சில ஆண்களை இரும்புச்சங்கிலியாலும் கட்டி வைத்து சித்ரவதை செய்துள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சற்று உடல்நலம் தேறி வந்தால் அவர்களுக்கு மருந்து, மாத்திரைகளை டோஸ் அதிகம் கொடுத்து மனநலம் பாதிக்கப்பட்ட நிலையிலேயே வைத்துள்ளனர்.
இங்குள்ளவர்களை கவனிப்பதற்காக மனநல மருத்துவர் மற்றும் பாதுகாவலர், செவிலியர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. ஆசிரம ஊழியர்களே கவனித்து வந்துள்ளனர். மனநிலை பாதித்தவர்களுடன் நல்ல நிலையில் இருப்பவர்களையும் ஒரே அறையில் அடைத்து வைத்துள்ளனர்.
நீடிக்கும் மர்மங்கள்
அதுபோல் இங்கு போதிய கழிவறைகள், ஓய்வறைகள், சுகாதாரமான குடிநீர் வசதி இப்படி எந்தவொரு அடிப்படை வசதிகளுமே இல்லாமல் இயங்கி வந்துள்ளது. இங்கு நடக்கும் செயல்களை வெளியில் யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாகவும், அவர்கள் வளர்த்து வரும் குரங்குகளை கடிக்க வைத்தும் பயமுறுத்தி வந்துள்ளனர். இங்கு தங்கியுள்ளவர்களை பார்க்க வரும் அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் யாரையும் ஆசிரமத்தின் உள்ளே அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளனர்.