அன்பில், உத்தமர்கோவில் பெருமாள் சாமிகள் தீர்த்தவாரி கண்டருளினர்
ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் அன்பில் சுந்தரராஜபெருமாள் மற்றும் உத்தமர்கோவில் புருஷோத்தம பெருமாள் தீர்த்தவாரி கண்டருளினர்.
மாசிமகத்திருவிழா
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான அன்பில் சுந்தரராஜபெருமாள் கோவிலில் மாசிமகத்திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி நேற்று முன் தினம் இரவு கோவிலிருந்து சுந்தரராஜ பெருமாள் புறப்பட்டு உத்தமர்கோவில் மண்டபம் வந்தடைந்தார். இரவு முழுவதும் அங்கு தங்கினார். பின்னர் நேற்று காலை புறப்பட்டு 10 மணிக்கு ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றிற்கு வந்தடைந்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த அலங்கார பந்தலில் எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளினார். பின்னர் சிறப்பு திருவாராதனங்கள் நடைபெற்றன. இரவு 10 மணிவரை பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு இன்று காலை (செவ்வாய்க்கிழமை) அன்பில் சென்றடைகிறார்.
உத்தமர்கோவில்
மாசிமகத்தை முன்னிட்டு உத்தமர் கோவில் உற்சவர் புருஷோத்தம பெருமாள் கொள்ளிடம் ஆற்றில் நேற்று காலை தீர்த்தவாரி கண்டருளினார். பின்னர் சிறப்பு திருவாராதனங்கள் நடைபெற்றது. அங்கு பக்தர்களுக்கு காட்சியளித்த பின் இரவு அங்கிருந்து புறப்பட்டு கோவில் சென்றடைந்தார். இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள்களை தரிசனம் செய்தனர்.
இதேபோல் திருச்சி இந்திரா நகர் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் மாசி மகத்தை முன்னிட்டு ஸ்ரீனிவாச பெருமாள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கைலாசநாதர்
திருச்சி-தஞ்சை சாலையில் வரகனேரி உடையான்குளத்தில் உள்ள கமலாம்பிகை உடனுறை கைலாசநாத சுவாமி கோவிலில் மாசிமக திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி திருக்கல்யாண நிகழ்ச்சி 2-ந் தேதி நடந்தது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் காலை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர்களை இழுத்தனர். நேற்று தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) இரவில் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. இதேபோல் தொட்டியம், துறையூர் உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் தீர்த்தவாரி நடந்தது.